பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 68

 சரித்திர ஆசிரியர்களின் வாக்கால் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மட்டும் இல்லையானால், இவ்வாக்குமூலத்திற்கு மதிப்பேயிருந்திராது.

அல்லாவுதீன் தேவகிரியை வென்றபோது, 1295 இல் முகம்மதியர்கள் தக்ஷிணத்தில் (தக்காணத்தில்) தோன்றினார்கள். இரண்டாவது பட்டாணிய அரச பரம்பரையைச் சேர்ந்த கில்ஜி வமிசத்து இரண்டாம் அரசனான அல்லாவுதீனின் தளகர்த்தனான ஹஸார் தினரி - பெரும் பாலும் மாலிக்காபூர் என்று வழங்கப்படுபவன் - தலைமையில் வந்த மகம்மதியச் சேனை பல்லால இராஜ்யத்தை முற்றுகையிட்டது. பெரிய போர் 1311 இல் நடந்தது. அதில் பல்லால அரசன் தோற்கடிக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டான். துவார சமுத்திரம் சூறையாடப்பட்டது. பகைவன் தங்கத்தை ஏராளமாகத் தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றான். தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கண்டுவர மாலிக்காபூர் அனுப்பப்பட்டான். அக்காலத்தில் துவார சமுத்திரத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான பொருளின் பேராசையே தென்னிந்தியா முழுவதையுமே வெற்றி காணத் தூண்டியது. துவார சமுத்திரத்தைப் பிடித்த பின்பு மாலிக்காபூர் மலபாரை நோக்கிப் படையெடுத்தான். மகம்மதிய சரித்திர ஆசிரியரான பெரிஷ்டாவைப் போலவே அவனும் மலபாரை துவாரசமுத்திர அரசுக்குட்பட்ட பாளையமாகவே எண்ணினான். ஜெனரல் வில்க்ஸ் (General Wilks) என்பாரால் மலபார் என்ற பெயர் எந்த இடத்தைக் குறிக்கிறதென்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால், இப்பொழுது மலபார் என்ற சொல் விளக்கமாகச் சோழ பாண்டிய அரசுகள் அல்லது பொதுவாகச் சோழ மண்டலக் கரையைக் குறிக்கிறது. துக்ளக்கு வமிசத்தைச் சேர்ந்த மூன்றாம் முகம்மதுவால் 1326ல் மற்றொரு முறை துவாரசமுத்திர நகரம் அழிக்கப்பட்டது. ஆனால், பல்லால அரசு முழுவதும் அழிக்கப்படவில்லை. பல்லாலர்கள் தலைநகரைத் தொன் மூலுக்கு (தும்கூர்) மாற்றிக் கொண்டார்கள். இது சீரங்கப்பட்டணத்திற்கு ஒன்பது மைல் வடக்கேயுள்ளது. விஜயநகர அரசர்கள் 1336 இல் எழுச்சியடைந்த பிறகும் பல்லால அரசர்கள் 1387 ஆம் ஆண்டு வரை சில அதிகாரங்கள் செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு நவபல்லாலர் என்று வழங்கப்பட்ட ஒன்பது முக்கிய இளவரசர்கள் அடங்கிய வலிமைமிக்க மரபின் ஆட்சி முடிவடைந்தது. இந்த மரபின் ஆரம்பத்தில் மிகச் சிறிய நாட்டையே பெற்றிருந்தனர். ஆனால் பின்வந்த அரசர்கள் தங்கள் வலிமையினால் கருநாடகம் முழுவதையும் கிருஷ்ணா நதிவரை வெற்றி கொண்டார்கள். மேற்கே துளுவமும் கிழக்கே திராவிடமும் (முக்கியமாகச் சோழபாண்டியருடைய