பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 74


திராவிடமொழிகளில் பன்மைப் பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், மரியாதைப் பெயராக ஒருமைக்கே அப்பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. துவார சமுத்திர அரசர்களின் மொழி கன்னடம். ஆனால், விசய நகரத்தைத் தோற்றுவித்தவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். ஆகையால், அவர்கள் இராஜ்யம் முழுவதிலும் தெலுங்கை ஆட்சிமொழியாக்கினார்கள். அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட நாட்டின் மாவட்டங்கள் மைசூரின் ஒரு பகுதியன்று. ஆனால், அது கன்னட நாட்டின் ஒரு பகுதி அல்லது கன்னட மொழி பேசப்படும் நாடு ஆகும். கன்னட மாவட்டத்தின் மத்தியில் புதிய தெலுங்கு அரசமரபு, தெலுங்கு நீதிமன்றம் ஒன்றை நிறுவியது. இது தெலுங்கு இராணுவத்தால் ஆதரிக்கப்பட்டு வந்தது. இங்கிருந்து தென் பகுதிகள் பலவற்றிலும் தொகுதி தொகுதியாகத் தெலுங்கர் குடியேறவும் படையெடுப்புகள் நிகழ்த்தவும் துணைபுரிந்தனர். விசயநகரத் தெலுங்கு தளகர்த்தர்களால் மதுரை பிடிக்கப்பட்டதும் திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதும் தெலுங்கு பாளையக்காரர்களும் குடியேற்ற மக்களும் நிறைந்ததன் காரணத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. கிருஷ்ணராயருடைய ஆட்சிக்காலத்திலேதான் விசயநகரம் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்தது. அவர் 1508 முதல் 1530 வரை ஆட்சி செலுத்தினார். அவருடைய ஆட்சிக் காலம் ஏறக்குறைய இந்த இருகால வரையறைக்குள்ளேதான் இருக்க வேண்டுமென்பது உறுதி. விசயநகர மாகாணம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே ஏற்பட்ட இந்திய மாகாணங்களுக்கெல்லாம் மிக்க வலிமையுடையதாயிருந்தது. கிருஷ்ணராயர் மிக்க திறமையாளர் மாகாண அரசர்களில் புகழ்வாய்ந்தவர்; மிக்க வெற்றி பெற்றவர் என்று நன்கு மதிக்கப்பட்டு வந்தார். அவர் தெலுங்கு இலக்கியத்தைப் பெரிதும் ஆதரித்தார் என்று புகழப்படுகின்றது. 1520 இல் மகம்மதியர்கள் கிருஷ்ணராயரால் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். அது காரணமாக அதிலிருந்து அதிக காலம் மகம்மதியரை அடிக்கடி அடக்கியே வந்தனர். அவர் காலத்திற்குப் பின் ராஜ்யம் பலவீனமடைய ஆரம்பித்தது. அவருக்குப் பிறகு புகழில் சிறந்தவர் நரசிம்மர் அல்லது வீரநரசிம்மராயர் என்பவர். இவர் கிருஷ்ணராயருக்கு முந்திய காலத்தில் ஆட்சி செய்தவர். இவர் ஆட்சி 1487இல் ஆரம்பித்தது. இவரே இவ்வரச பரம்பரையின் முதல் அரசர் என்றும்,


1. விஜய நகரராயர்கள் தென்னிந்தியாவில் மிக்க பலம் வாய்ந்த அரசர்களாய் இருந்தமையால், புதிய தமிழ் ஏற்பாட்டின் பொருளில் சீசர் என்ற சொல்லுக்குச் சரியான பதமே ராயர் என்பது (மொழி மாற்றத்தில் அரசியல் செல்வாக்கு காண்க - ந.ச.)