பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75 கால்டுவெல்

சோழபாண்டிய நாடுகளை வெற்றி கண்டு நாட்டைப் பரப்பினார் என்றும் வரலாறு கூறுகிறது. சந்திரகிரி வேலூர்க் கோட்டைகள் இவரால் கட்டப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆயினும் சிலர் இக்கோட்டைகள் நரசிம்மருக்குப்பின் வந்த கிருஷ்ணராயரால் கட்டப்பட்டன என்று சொல்கின்றனர். இக்காலத்தில் இந்து இராஜ்யமாகிய விஜயநகரம் வலிமையடைய ஆரம்பித்தது. இதன் வளர்ச்சி, முகம்மதியப் படையெடுப்புகள் தெற்கே பரவாமல் தடுக்கக் கூடிய அரணாய் அமைந்தது. இந்த அரண் இரண்டு நூற்றாண்டுகள் வரை மிக்க பயனுடையதாய் இருந்தது. அதற்குப் பிறகு மகம்மதியர்களை அடக்கத்தக்க வலிமையை விசயநகர அரசு இழந்து விட்டது.

விசயநகர அரசின் முடிவு

நரசிம்மராயருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் முதன் முதல் போர்ச்சுகீசியர் வந்திறங்கினார்கள். 1498 இல் அவர்கள் கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினார்கள். 1311 இல் நாம் முன்பே பார்த்ததுபோல மலபாரின் அதாவது சோழ மண்டலக்கரையின் பாண்டிய சோழ அரசர்கள் கன்னட அரசனாகிய துவாரசமுத்திர அரசனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பதை மகம்மதியர்கள் அறிந்தார்கள். போர்ச்சுகீசியர் வந்த காலத்தில் உண்மையில் சுதந்தர நாடாய் இருந்தது, விஜய நகர அரசு ஒன்றுதான். அவர்கள் சோழமண்டலக் கரையைக் ‘கோரமண்டல் கோஸ்டு’ என்று வழங்கினார்கள். இராயர்களின் ராஜ்யத்தை ஐந்தாவது மாகாணமென விவரித்தனர். இந்த மாவட்டம் கொல்லத்திலிருந்து (கொயிலான்) ஒரிஸ்ஸா வரை பரவி இருந்ததென எண்ணினார்கள். அவர்களுக்கு முந்திய அராபியர்களால் கூறப்பட்ட மபாரைவிட இது பரப்பளவில் பெரியதாய் இருந்தது. ஆதிகாலப் போர்ச்சுகீசியர்கள் தென்னிந்தியா முழுவதையும் ‘நரசிங்க ராஜ்யம்’ என்று குறிப்பிட்டார்கள்; அக்காலத்தில் அரச பீடத்திலிருந்த அரசராகிய புகழ்வாய்ந்த இராயருடைய பெயரை வைத்தே வழங்கினார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

1576இல் பார்போஸா என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:

‘இந்த ஆற்றுக்கு அப்பாலிருந்து நரசிங்க அரசு ஆரம்பிக்கிறது. இது ஐந்து மிகப் பெரிய மாகாணங்களாலாகியது. ஒவ்வொரு மாகாணத்திலும் அதனதன் சொந்த மொழி வழக்கிலிருந்தது. முதல் மாகாணம் மலபார் கரை ஓரமாய் அமைந்திருந்தது. இது துளு நாடு அல்லது தென் கன்னடத்தின் புதிய மாகாணம் என்று வழங்கப்பட்டது.