பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 76

இதன் பொருள் துளுவநாடு என்பது. மற்றொன்று உள்நாட்டில் அமைந்திருந்தது. மற்றொன்றின் பெயர் தெலிங்கம் என்பது; இது ஒரிஸ்ஸா ராஜ்யத்துடன் இணைந்திருந்தது. மற்றொன்று கன்னடம், அதில் பிரசித்திபெற்ற பிஸ்நாகா நகரம் இருக்கிறது. அதற்கு அப்பால் தமிழ் மொழி பேசும் சோழமண்டல ராஜ்யம் இருந்தது’ (கர்னல் யூல், டாக்டர் பர்னல் என்னும் இருவரின் India in Antiquary for June 1879).

பார்போஸாவின் மூன்று செய்திகளிலிருந்து இந்த வாசகத்தின் குறிப்பு எடுக்கப்பட்டதாக எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். விசய நகர இராஜ்யம் சிலசமயங்களில் கர்நாடகம் என்று வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ‘கர்நாடிக்கு’ என்றும் மற்றும் சில சமயங்களில் சிதைந்து ‘கனரா’ என்றும் வழங்கப்பட்டது.

மகம்மதியர்களின் பலம் பெருகி வந்த காலத்தில் இந்துக்களின் அரசுகள் தங்கள் சந்தர்ப்பங்களைத் தீவழிப்படுத்தி, தங்கள் ஆற்றலை எல்லாம் உள்நாட்டுப் போர்களிலே செலவழித்தன. நாளடைவில் 1564 இல் விசயநகரத்தை ஆண்டு வந்த இராமராயர், மிக்க இறுமாப்புடையவராயிருந்தார். அதனால், வடக்கே இருந்த மகம்மதிய அதிகாரிகள் ஆத்திரங் கொண்டார்கள்; சண்டை மூண்டது. இராமராயர் தோற்கடிக்கப்பட்டு, அந்த இளவரசர்களின் சதியால் கொல்லப்பட்டார். அவர் வீழ்ச்சியடைந்த பெரும்போர் 1565 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தலைக்கோட்டையில் நடைபெற்றது. அதேசமயத்தில் விசய நகரமும் சிறிதும் இரக்கமின்றி நாசமாக்கப்பட்டது, தமிழ்நாட்டிலுள்ள தென்மாவட்டங்களில் ஏராளமான தெலுங்கு குடியேற்ற மக்கள் வந்து புகுந்தது அச்சமயத்திலேதான் என்று நான் ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ் மாவட்டங்களில் தெலுங்கு மரபுவழியைச் சேர்ந்த மக்கள் குறைந்தது ஒரு கோடி இருக்கலாம். இத்தெலுங்கர்களின் மூதாதைகள் முகம்மதியர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். அத்தொல்லையினின்றும் தப்புவதற்காக அம்மக்கள் தெலுங்கு அரசர்களால் ஆளப்பட்டு வந்த மதுரை, தஞ்சாவூர் முதலிய இடங்களுக்குத் தற்காப்பிற்காகக் கூட்டங்கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள்.

இந்தக் குடியேற்ற மக்கள் பொதுவாக எப்படித் தோன்றி வளர்ந்தார்கள் என்பதற்குத் தக்க சான்று திருநெல்வேலியிலுள்ள எட்டையபுரத்து ஜமீன்தார்கள் குடும்பத்தில் பரம்பரையாகட் பாதுகாக்கப்பட்டு வரும் குறிப்புகளேயாகும். உள்ளூர்க் குடும்பச் சரித்திரத்திலடங்கியுள்ள செய்திகளின் சுருக்கம் வருமாறு: