பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 88


ஒருமைப்படுத்துதல், அவர்களது வேற்றுமைகளை வேறுத்தல், அவர்களின் நல்லெண்ணங்களைப் பெறுதல் முதலிய பணிகள் விசுவநாதனுடைய கடமைகளாய் இருந்தன. இச்செயல்களை எல்லாம் அவன் அறிமுகமற்ற நாட்டில் அதுவும் கையில் காசின்றி - செய்ய வேண்டியிருந்தது. கடைசியாக அவன் வெற்றியடைய ஒரு வழியைக் கண்டுபிடித்தான். ஒவ்வோர் இனமக்களிலும் மிக்க செல்வாக்குப் பெற்றவர்களை உத்தியோகத்தாலும் வேறுவகை உயர்வாலும் மேன்மைப் படுத்துவதும் அதற்குப் பதிலாக அவர்களும் அவர்களுடைய மரபினரும் விசுவநாதனிடமும் அவனுடைய மரபினரிடமும் அரச நன்றியுடன் (ராஜ விசுவாசத்துடன்) நடந்து கொள்வதாக வாக்குறுதி பெறுவதும் என்பதே அவ்வழியின் நோக்கம். காலச் சூழ்நிலைக்கு இதைப்போன்று வேறு எதுவும் நன்மையான செய்கையாய் இருந்திருக்க இயலாது என்றாலும், அது எல்லாவிதமான இடையூறுகளையும் உண்டாக்கி முடிவில் நாயக்க அரச பரம்பரையே கவிழ்ந்துவிடுவதற்குப் பெரிய காரணமாயிற்று. அதன் விபரம் வருமாறு:

மதுரைக் கோட்டைக்கு எழுபத்து இரண்டு கொத்தளங்கள் இருந்தன. இப்பொழுது முதலில் ஒவ்வோர் அரணும் குறிப்பிட்ட ஒவ்வொரு தலைவனின் அதிகாரத்தில் விடப்பட்டது. அவனவன் வமிசத்தினரும் எந்தக் கணத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் அந்த உத்தியோகத்திற்கு உரிமையுடையவர்கள். அவன் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கப்பத்தைக் கட்டவும் ஆளுநருடைய (கவர்னருடைய) படைக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள படைவீரர்களை எப்பொழுதும் தயாராக வைத்திருந்து கொடுக்கவும் நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதி முழுவதிலும் ஆளுநரின் ஆணைப்படியே அமைதி நிலவச் செய்யவும் கடமைப்பட்டவன். இப்பணிகளையும் மற்ற வேலைகளையும் செய்வதாக வாக்குறுதி கொடுத்த தலைவனுக்கு விசுவநாத நாயக்கனும் அரிய நாயக்கனும் அவன்பால் வைத்திருந்த மதிப்பிற்கு ஏற்பவும் அவன் வகித்த பதவி நிலைக்கு ஏற்பவும் சில கிராமங்கள் அடங்கிய நாட்டின் ஒரு பகுதி மானியமாக வழங்கப்பட்டது. அவர்களுக்குப் பாளையக்காரர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவற்றுடன் ஒவ்வொரு மானியக்காரருக்கும் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. விருதுகளும் சலுகைகளும் கவர்னரின் சட்டப்படி ஆடம்பரமான சடங்குகளின் மூலம் அளிக்கப்பட்டன. இதுதான் புகழ்பெற்ற மதுரை பாளையக்காரர்களின் தொடக்கம், அப்பாளையக்காரர்களில் சிலருடைய சந்ததியார் இன்று பழைய உத்தியோகமும் அதிகாரமும் அற்றவர்களாயிருப்பினும், தங்கள் மூதாதையரின் மானியத்தை அனுபவித்து வருகின்றனர்.