பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

85

காட்டல். (6) தழுவு வாக்கியங்கள் தலைமை வாக்கியத்தின் முன் வருதல். (7) தழுவும் மொழி தழுவப்படும் மொழிக்குப் பின் வருதல்.

வட இந்திய மொழிகள் திராவிட மொழிகள் ஆகியவற்றின் இலக்கண அமைப்பில் இத்தகைய ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் இவற்றால் இவ்விரண்டு மொழியினங்களுக்கும் நேரான உறவு உள தெனக் கூறிவிடுதற்கில்லை. ஏனெனில், இவ் வொப்புமைகள் திராவிடமொழிகளோடுமட்டும் சிறப்பாகக் காணப்படும் ஒற்றுமைக ளாகாமல், சித்திய இனத்தைச் சேர்ந்த மொழியினங்கள் பலவற்றோடும், ஒரே வகையில், ஒரே அளவில் காணப்படும் பொதுப்படையான ஒப்புமைக ளாகின்றன. துருக்கிய மங்கோலிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே காணப்படும் வேற்றுமைகளில் யாதொன்றும், வட இந்திய மொழிகளிற் காணப்படவில்லை. எடுத்துக் காட்டாக, சித்திய மொழியினங்களிலில்லாத பெயரெச்சத்தை எடுத்துக்கொள்வோம். இது கோண்டு ஒன்று நீங்கலாக ஏனைய திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் உள்ளது; ஆனால் வட இந்திய மொழிகள் ஒன்றிலும் இல்லை.

அதைப் போன்றே, திராவிட மொழிகளில் எல்லா வினைத்திரிபுகளுக்கும் ஒழுங்காக எதிர்மறைவினை இருக்கின்றது. அவற்றுள் எதுவும் வடஇந்திய மொழிகளில் இல்லை. திராவிட மொழிகளிற் காணப்படும் இடப்பெயர் எண்ணுப் பெயர்கள் முதலியவற்றுள் ஒன்றுதானும் அவற்றுள் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு அப்பால் பெஹிஸ்தன் பட்டயங்களிலும், சீன மொழியிலும், ஒஸ்தியக்கு[1] மொழியிலும், லாப்பர்[2] மொழியிலுங்கூட இவற்றுட் சில காணப்படுகின்றன. மேலும், இம் மொழிகளில் திராவிடத் தாக்கு


  1. Ostiak
  2. Language of the Lapps