பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

93

மறுக்கமுடியாத உண்மையாகும்” என்று கூறியுள்ளார். வட இந்திய மொழிகளுள் அகரமும் ஆகாரமும் ஏகாரமாக மாறியமை, இத்தகைய ஆரியச் சார்பற்ற மாறுதல் என்று அவர் கூறுகிறார். நாவடி அண்ண மெய்யாகிய ளகரத்தைப் பற்றிக் கூறுகையில், அது ரகர டகரங்களுடன் மயங்குகின்றது என்றும், அது நடு இந்தியாவிலுள்ள கோலர்களின் குழுவில் காணப்படுகிறது என்றும் அவர் உரைக்கின்றார். இக் கோலர்களுடனும் திராவிடர்களுடனும் நெடுநாள் உறவு கொண்டிருந்த மராட்டிய, ஒரியா மக்களிடை, இந்த ளகரம் மிகுதியாகப் பயில்வது வியப்பன்று என்றும் அவர் கூறுகிறார்.

“சிந்தி மொழியின் இலக்கணம்”[1] என்ற நூலில் டாக்டர் எர்னஸ்டு ட்ரம்பு ஆரியச் சார்பற்ற அல்லது தாத்தாரிய மொழியினத் தாக்குதல்கள் வட இந்திய மொழிகளில் காணப்படுகின்றன’’ என்று உறுதியாகக் கூறுகிறார்; முன் நா அண்பல் ஒலியாகிய தகர நகர ஸ்கரங்களினிடமாக, அவை நாஅடி அண்ண ஒலியாகிய டகர ணகர ஷகரங்களைப் பெரிதும் ஏற்கின்றமை அதற்குச் சான்று பகரும் என்றும் கூறுகிறார். அதே போன்று உயிர்ப்பு ஒலியாகிய ஹ என்பதைப் பிராகிருத மொழி விலக்குவது நோக்க, “அதைப் பேசிய பொது மக்களிடையே தாத்தாரியத் தாக்கு இருந்திருக்கவேண்டும். தெற்கேயுள்ள திராவிட மொழிகளில் இவ் எழுத்து இல்லாமை காண்க” என்றும் கூறுகிறார். மேலும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த தெலுங்கு ‘ச்ச’, ‘ஜ’ என்ற எழுத்துக்களை ‘ட்ச’ என்றும், ட்ஸ் என்றும் ஒலிப்பது போலவே மராட்டி மொழியும் ஒலிக்கின்றது; ஆதலால் திராவிடத் தாக்கு மராட்டியிலுள்ளது வெளிப்படை என்றும் அவர் முடிவுகட்டுகிறார்.


  1. “Grammar of the Sindhi Language"—Dr. Ernest Trumpp.