பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராபர்ட் கால்டுவெல்

அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து விளங்கிய இவர், எளிதில் கல்விநலமும் வாய்க்கப்பெற்றார். பதினாறாம் ஆண்டு வரை இவர் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின், தம் தந்தையாரின் விருப்பப்படி ஓவியத் துறையிற் பயின்று தேர்ந்து உயர்ந்த பரிசும் பெற்றார். எனினும், அத்துறையில் தொடர்ந்துழைத்து வாழ்க்கையை நடத்த இவர் கருத்துச் செல்லவில்லை. இறைவனதாற்றலையும், பெருமையையும் தெரிக்கும் மெய்யுணர்வு நூல்களிலேயே இவர் கருத்துச் செல்வதாயிற்று. எங்கும் நிறைந்த பரம்பொருளின் பெருமையைத் தம் சமய உண்மைகட்கேற்ப யாண்டும் பரப்பித் தொண்டாற்றுவதே தலைசிறந்த வாழ்க்கைப் பணியாம் என்று இவர் தேர்ந்து கொண்டார்.

அதற்கேற்ப, இருபதாம் அகவையில், இலண்டன் நகரத்திலிருந்த சமயத்தொண்டர் சங்கத்தில் இவர் உறுப்பினராகச் சேர்ந்தார்; அதன் சார்பில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஐரோப்பியத் தொன்மொழிகளிலமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும் தெளிவுபெறக் கற்றார். அப் பல்கலைக் கழகத்தில் கிரீக்குமொழி பயிற்றியவர் பேராசிரியர் சர் டேனியல் சேண்ட்ஃபோர்டு என்பார். அவர்