பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

109

கூறியது: 'துதமொழி இலக்கணச் சுருக்கத்தின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: பேரறிஞர் கால்டுவெலுடன் யாம் பெரிதும் ஒத்த கருத்துடையோம் ஆயினும், திராவிட மொழிகளுக்கும், கெல்த்திய மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவு இன்னும் நன்கு ஆராயக்கிடப்பதொன்றால் எண்ணுகின்றோம்’ என்பதே. இத்துறை ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததே என்பதில் ஐயமில்லை. போப் இந்து - ஐரோப்பிய மொழியுடனே ஒற்றுமை, உறவு, இனஒற்றுமை என்று கூறுவனவெல்லாம் எமக்கு உடன்பாடே. இந்நூலின் முதற்பதிப்பில் அவற்றை யாமே எடுத்துக்காட்டியும் உள்ளேம். ஆனால், அவ் எடுத்துக்காட்டுக்களிலிருந்து போப் கொண்ட முடிபு எம் முடிவான முடியுடன் வேறுபடுகிறது. எமது கோட்பாடு சித்திய, இந்து-ஐரோப்பிய உறவுகள் இரண்டற்கும் இடந்தருபவையாக இருப்பினும், இந்து-ஐரோப்பிய இனத்தைவிடச் சித்திய இனமே திராவிடக் குழுவோடு நெருங்கிய உயிர்நிலையான தொடர்பு உடையது என்பதாகும். கெல்த்திய உறவுகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இம்மொழியினமே பொதுப்படச் சித்திய இனத்துடனும், சிறப்பாக பின்னியக் குழுவுடனும் மிக நெருங்கிய தொடர்புடையவையாகத் தோன்றுகிறது. கெல்த்தியர் ஐரோப்பாவுக்கு வரும்போது அங்கிருந்த முன் குடிகள் கெல்த்திக் மொழியையும் பின்னிஷ் மொழியையும் பேசி வந்தார்களோ என்பது ஆராயத்தக்கது. மேலும், கெல்க்கிய உறவுகள் என்று கூறப்படும் உறவுகள் சிறப்பாகக் கெல்த்திய உறவுகள் தானா அல்லது உண்மையில் சித்திய உறவுகள் தானா என்பதும் ஒப்பிட்டு ஆராயத்தக்கதொன்றாம்.


1. Outline of the Grammar of the Tuda, Language.