பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

றன்பால்) பெயர் இருந்ததாகக் காணப்படுகிறது. ஆனால் வினைச்சொல்லில் பால் பாகுபாடு ஏற்பட்டது பிற்காலத்திலே என்றுதான் எண்ணவேண்டும். இந்தியாவுக்குள் திராவிடர் வருங்கால் அவர்கள் மொழியின் வினைச்சொல்லில் விகுதியே இருந்திருக்க இடமில்லை; எனவே, பால் பாகுபாடும் இருந்திருக்க முடியாது. உலகில் வேறெந்த மொழிகளையும் விடத் திராவிடமொழி வினைச்சொற்களிலேயே பால் பாகுபாடு நிறைவுடையதாக இருக்கின்றது என்பது பின் தெளிவுறுத்தப்படும். இத்தகைய பால் பாகுபாட்டு வளர்ச்சி வடமொழிச் சார்பினால் உண்டான தொன்றாகாது ; அதற்கு நேர்மாறாகவே உண்டாயிருத்தல் வேண்டும்.

திராவிட மொழிகளில் வடமொழியுடனும் இந்து, ஐரோப்பிய மொழிகளுடனும் தொடர்புடைய சில வேர்ச்சொற்களும், சொல் வடிவங்களும் காணப்படுகின்றன என்று பொதுப்பட மேற்கூறப்பட்டது.தவறான சில கருத்து முடிபுகள் அக்கூற்றிலிருந்து எழக்கூடுமாதலின், அவற்றை விலக்குதல் இன்றியமையாததாகும். ஆரியர்களும் திராவிடர்களும் பல நூற்றாண்டுகள் கலந்து உறைந்து வந்தமையால், வடமொழியிலிருந்து திராவிடமொழிகள் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன. எனினும், இத்தகைய சொற்களைக் கொண்டு மேற்கூறிய மொழியொப்புமைக் கருத்தை ஈண்டு யாம் விளக்க முயலவில்லை. இரு மொழிகளின் அடிப்படையான மூலச் சொற்களிலும், சொல்லமைப்பிலும் காணப்படும் ஒற்றுமைகளே யாம் எடுத்துக் கொண்டனவாகும். தம்மையடுத்து வழங்கிவந்த வளமிக்க பிறமொழிகளிலிருந்து திராவிட மொழிகள் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே; ஆனால் அதுபோலவே வடமொழியும் சிற்சில வகைகளில் திராவிடமொழிச் சொற்களைக் கடன் வாங்கிப் பயன்படுத்தப் பின்