பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

113

வாங்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியில் இவ்வாறு வந்தேறியுள்ள சொற்களைப் பிரித்தறிதல் அரிதன்று. எடுத்துக்கொண்ட பல சொற்களும், சொல்லமைப்புகளும் வடமொழியோடு மட்டுமன்றி இந்து-ஐரோப்பிய மொழியினத்துடனும் ஒற்றுமையுடையனவாகக் காணப்பெறுகின்றன. இன்னுங் கூறப்போனால் வடமொழியிற் காணப்பெறா ஒற்றுமைகள் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் காணப்பெறுகின்றன. வடமொழியில் காணப்பெறும் ஒற்றுமைகளும் சிற்சில இடங்களில், திருந்திய அமைப்புடைய பிற்கால வடமொழியிலன்றிப் (ஸம்ஸ்க்ருதம்) பண்டைய திருந்தாத வடமொழியிலேயேயாகும்.

திராவிட மொழிகளிற் காணப்பெறும் இத்தகைய கொடுக்கல் வாங்கல் சார்பற்ற அடிப்படையான ஒற்றுமைகளிற் சில கீழே தரப்படுகின்றன :-

(1) கிரேக்க மொழியிற்போல் னகரம் உடம்படு மெய்யாகப் பயன்படுதல்.

(2) மூன்றும் இடத்திலும் (படர்க்கையிலும்), வினைச்சொல்லிலும் பால்பாகுபாடு இருத்தல்; சிறப்பாகப் பொதுப்பால் (ஒன்றன்பால்) என ஒன்றிருத்தல்.

(3) படர்க்கையொருமை ஒன்றன்பாற் பெயரின் விகுதி 'த்' ஆக இருத்தல்.

(4) இலத்தீனைப் போன்று பலவின்பால் விகுதி அகரமாயிருத்தல்.

(5) தொலைச் சுட்டு அகரமாகவும், அண்மைச்சுட்டு இகரமாகவும் இருத்தல்.

(6) பாரஸீக மொழி போன்று இறந்தகால மறிவிக்கப் பெரும்பாலும் 'த்' என்ற அடையை (இடைநிலையை)ப் பயன்படுத்தல்.