பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வகையில் பழைய மொழிகள் என்று கூறத்தக்கவையேயாயினும், அவற்றின் சிறந்த பண்பு பழைமையன்று; அவற்றின் திருந்திய உருவும், செம்மைப்பாடுமேயாம். வட மொழிக்கும் பழைய பாகதங்களுக்குமோ, அல்லது வட மொழிக்கும் இன்றைய கெளரிய மொழிகளுக்குமோ இடையில் என்ன தொடர்பு உளதோ, அதே தொடர்புதான் செந்தமிழுக்கும் இன்றைப் பேச்சுக் தமிழுக்கும் இடையே உளது. இன்று பேச்சுத் தமிழுக்கும் இவ் உயர் செந்தமிழ் நடைக்கும் இடையே எவ்வளவு மாறுபாடு இருக்கிறதோ, அவ்வளவு பெரும்பாலும் அவை எழுதப்பட்ட காலத்துப் பேச்சு மொழிக்கும் அதற்கும் இடையே இருந்திருக்கக் கூடும். இவ்வளவு திருத்தமும் செம்மைப்பாடும் உடையதொருமொழி என்றேனும் எத்தகைய வகுப்பாரிடையேனும் பேச்சு வழக்கிலிருக்கக் கூடுமென்பது நம்பக்கூடாத செய்தியேயாம். அகில் பல பழைய சொல் வடிவங்கள் இருக்கின்றமை உண்மையே. ஆனால், இலக்கிய வழக்கு ஏற்பட்ட போது கொச்சை என்று கூசாது விலக்கப்பட்ட சொற்களுள் மிகப் பழமையான சொற்களும் விலக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

எனவே, இலக்கியச் சொல் பழைமை மிக்க சொல்லாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அடிக்கடி பேச்சு வழக்குச் சொற்கள் அவற்றுக்குச் சரியான இலக்கியச் சொற்களை விடப் பழைமை உடையவையாயிருப்பதும் உண்டு. ஆயினும், ஒரு வகையில் இலக்கியச் சொல் உயர்வு உடையதென்று ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அதாவது, ஒரு சொல்லின் பழைமையை அல்லது பழைய வடிவை வரையறுக்கும் இடத்தில் அதன் பேச்சு வடிவைவிட இலக்கிய வடிவையே பழைமைக்குச் சான்றாகக் கொள்ள முடியும். பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், என்று, எவ்வடிவில் வழங்கின என்று கூற