பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ராபர்ட் கால்டுவெல்

கத் தஞ்சைமாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற்பெருமான் கோவிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு வியந்தார்......நெல்லைமாநகரிற் பிறந்து கிறிஸ்துமதத்திற் சேர்ந்து தஞ்சையிற் குடியேறி வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியாரைக் கண்டு அளவளாவினார். அவரியற்றிய இனிய தமிழ்க் கீதங்களைக் கேட்டு இன்புற்றார். பின்பு காவிரிக்கரையிலமைந்த சிராப்பள்ளிக் குன்றின் அழகையும், ஆற்றிடைக்குறையி லமர்ந்த திருவரங்கத்தின் சிறப்பையும் அறிந்து நீலகிரியை நோக்கிச் சென்றார் காருலாவும் நீலகிரியில் வசித்துவந்த ஸ்பென்சர் என்னும் அத்தியட்ச குருவின் விருங்தினராக ஒரு மாத காலந் தங்கி இளைப்பாறினார். நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கொங்குநாட்டுக் கோவையின் வழியாகப் புலவர் நாவிற் பொருங்கிய மதுரைமாநகரை நோக்கி நடந்தார்.......பாண்டி நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்தபொழுது தாயைக் கண்ட சேய் போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார் ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையையாற்றில் வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங் குளிர்ந்தார். அப்பால் அங்கயற் கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார்......பைந்தமிழ் வழங்கும் நாடு பாண்டிநாடே யென்றும், கசடறக் கற்ற புலவரடங்கிய கழகத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த நகரம் மதுரைமாநகரம் என்றும் எண்ணிய நிலையில் எல்லையற்ற இன்பமுற்றார்......தமிழ் மணக்கும் மதுரைமா நகரைவிட்டு நீங்கித் திருமங்கலத்திற் சமயத்தொண்டு புரிந்த [1]திரேசி என்னுந் தமிழறிஞருடன் அளவளாவி, சில நாட்களில் தென்றல் வந்துலாவும் திருநெல்வேலியை அடைந்தார்...... "பொருனையாற்றைக் கடந்து பாளையங்கோட்டைக்கச் சென்-


  1. Dr. Tracy.