பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

(இ) ஆனால், தமிழில்மட்டும் மேற்கூறிய இரண்டு காலங்களிற்கும் முந்திய மூன்றாவது வகையான வடசொல் வரவுகள் உள்ளன. இவை வேதாந்த, சைவ, வைணவ, சமய நூல்களுக்கு முன்னாகவே, இலக்கியத் திருத்தம் ஏற்பட்ட முதற் காலத்தில்தானே, வடமொழியிலிருந்து வந்து நாட்டுவழக்காலும் காலப்போக்காலும் பெரிதும் சிதைந்த சொற்கள் ஆம். இவை பிற திராவிட மொழிகளிலுள்ள வடசொற்களைவிடக் காலத்தால் முந்தியவையாம். இவ் வரவுகள் வட பாகத மொழிகளைக் காட்டிலும் மிகுதியாகச் சிதைவடைந்தவையே யாயினும் அவ் வடபாகதங்களிலிருந்து வந்தவையல்ல; தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த பார்ப்பனக் குருமார், சோதிடர், புலவர் முதலியவர்களது வாய் மொழியினின்று நேராகக்கொள்ளப்பட்டுத் தமிழர் கூட்டுறவால் சிதைந்தவையேயாம். இவை சமணகாலத்துப் பாகத வரவுகளைவிட மிகுதியுஞ் சிதைந்தவை என்பது மட்டுமன்று, இவற்றின் சிதைவு வேறுவகைப் பட்டதுமாகும். அஃதாவது, பின்னைய சிதைவுகள் பெரிதும் பிற்காலத் தமிழ் இலக்கண நூலார் வகுத்த வடசொல் ஆக்க அமைதிக்கு இணங்கிய வையா யிராமல், யாதொரு வரம்புமற்றுச் சிதைந்தவையாம். இவ் வகையுட் சேர்ந்த சொற்களிற் சிலவே கீழ்வருவன:–

(அ) வடமொழி ஸ்ரி (ஸ்ரீ); பழந்தமிழ் திரு; பிற்காலத் தமிழ் சிரீ, சிறீ, சி.

(ஆ) வடமொழி கர்ம (ன்)-மிகப் பழந்தமிழ் கம்; பழந்தமிழ் கன்மம்; பிற்காலத்தமிழ் கருமம்.

(இ) தமிழ்த் திங்கட்பெயர்கள் இத்தகைய முதல் வடமொழிச் சிதைவுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழ்த் திங்கட் பாகுபாடு இன்று ஞாயிற்றியல் சார்பாய்[1]


  1. Solar-siderial