பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

பொருளாயிருப்பனவுங் காண்க. வடமொழி கர்ப்பூர(ம்) என்பதற்கு வடமொழியில் பகுதியின்மை நோக்க, அஃதும். இதே தமிழ்ச்சொல் மூலத்தினடியாக எழுந்ததே எனலாம். இதோடு கருப்பு என்னும் இச்சொல்லிலும், தோகை என்னும் சொல்லிலும், பு, கு என்ற தொழிற்பெயர் விகுதிகள் துணைப்பகுதிகளின் சாரியையாக வந்துள்ளன; ஆதலால் இவ் விகுதிகளின் வழக்கு கெஸியஸ் காலம் (அதாவது கி. மு. 400) முதற்கொண்டு உள்ளது என்பதும் தெளிவாகின்றது.

வடமொழித் தொடர்பற்றதாய் திராவிட மொழிகள் இருந்தமைக்குச் சான்றுபகரும் தொன்னூல்கள் கிரேக்க மொழிகளிலேயே காணப்படுகின்றமை வியக்கற்பாலதாம். பண்டைச் திராவிட மொழிச் சொற்கள் பெருந்தொகையினவாய் அவற்றுள் வழங்கப் பெற்றுள்ளன. டாலிமி என்னும் கிரேக்க நில நூலாசிரியர், பெரிப்ளுஸ் மரிஸ் எரித்ரை என்னும் நூலின் ஆசிரியர், இயற்கை வரலாறு' என்னும் டாலின் ஆசிரியர் பிளைனி ஆகியோர் இச்சொற்களை எடுத்தாண்டுள்ளனர். ஊர்ப்பெயர்கள், மக்கட்குழுப்பெயர்கள் பல வற்றை அவர்கள் குறிக் துள்ளார்கள். அவற்றுட் பல இன்றும் எழுத்துக்கெழுத்து மாறுபாடில்லாமல் வழங்கப் பெற்று வருகின்றமை குறிக்கற்பாலதாம். கிரேக்கர்களால் எழுதி வைக்கப்பெற்றுள்ள அத்தகைய திராவிடச் சொற்களில் சில கீழே தரப்படுகின்றன:

(1) பாண்டியன் கிரேக்க மொழியில் இது பண்டியோன் என்று வழங்கப்பட்டுப் பாண்டி நாட்டு மக்களையும், பாண்டியனையும் குறிக்கின்றது. இச்சொல் வட சொற்றிரிபு என்று முன்னர் காட்டப்பட்டது. மெகாஸ்தெனிஸும், பிளைனியும் குறித்த பாண்டீ என்ற சொல் வட சொல்லே


1.Periplus Meris Erythrai