பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

பழைமை மறுக்கப்படுவதாலும் (பாரதத்திலும், மனுவிலும் சீனர் குறிப்பிடப்படுவதாகத் தெரிகிறது) காலவரை யறைக்கு இவற்றுள் ஒன்றும் உதவாமற் போகின்றது. இலங்கைக்கு மகத ஆரியர் விஜயன் தலைமையிற் சென்றது இதன் காலத்தை ஒருவாறு வரையறுக்க உதவுவதுபோலத் தோற்றக்கூடும். ஏனெனில், தமிழ் நாட்டை அதற்குள் ஆரியர் நன்கறிந்திருப்பர் ஆதலின் என்க. மகாவமிசம் இதனைக் கி. மு. 550 என்று குறிக்கிறது. இதற்கு முந்தியே தமிழ்நாட்டையும் தண்டகாரணியத்தையும் ஆரியர் நன்கு அறிந்திருப்பர் என்று கூறலாம். மகாவமிசம் எழுதப்பட்ட காலம் கி. பி. 459 முதல் 477 வரை ஆகும். மகத நாட்டினர் இலங்கையிற் குடியேறிய காலம் உறுதியாக வரையறுக்கக் கூடாததா யிருப்பினும், கிறிஸ்து பிறக்கு முன்னரேயே குடியேற்றம் நடைபெற்றிருக்க வேண்டு மென்று உறுதியாகக் கொள்ளலாம். இதற்கு மொழியியல்பு ஒன்றே போதிய சான்று பகரும். தாமிரபர்ணி என்பது சிங்களம்; தாம்பபண்ணி என்பது பாலி; மகத ஆரியர் முதன் முதலில் இலங்கையிற் குடியேறிய இடத்தைத் தாமிரபர்ணி என்றே அழைத்தனர்; பின்னர் அத்தீவு முழுதையுமே தாமிரபர்ணி என்றழைத்தனர். கிரேக்கர்கள் இதனைத் தாப்ரபேனே என்று அலெக்ஸாந்தர் காலக்கிலேயே, குறித்துள்ளனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலோடும் ஆற்றின் பெயரை இஃது ஒத்திருப்பது வியக்கத்தக்கதே. இவ் வாற்றில் வானவர் குளித்ததாகப் பாரதத்தில் கூறப்படுவதால் இப்பெயர் இவ்வாற்றின் பெயராக வழங்கியிருத்தல் தெளிவு. எனவே, இக்குடியேற்றத்தார் இலங்கையை யடையு முன் இவ்வாற்றின் கரையிலுள்ள துறையாகிய கொற்கை யிற் சிலகாலந் தங்கிப் பழகியவர்களாதல் வேண்டும் என்று உய்த்துணரலாம். இதற்கேற்ப மகாவமிசத்திற் குடியேற்