பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்டுவெல் ஒப்பிலக்கணம்


க. தோற்றுவாய்

திராவிட மொழிகள் என்று ஒரு மொழியினமாக வகுக்கப்பெறும் மொழிகளுள் தமிழ்மொழியே பண்டைநாள் தொட்டு, திருத்தமுற் றமைந்ததும், செவ்விய முறையில் வளர்ச்சிபெற்றுவந்துள்ளதுமாகும். சுருங்கக் கூறின், திராவிடமொழி யினத்தின் வகைக்குறிமொழி தமிழே என்று கூறலாம்.

“திராவிடம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அது தென்னிந்திய மக்களிற் பெரும்பகுதியினாாற் பேசப்பட்டு வரும் உண்ணாட்டு மொழிகளைக் குறிப்பதாகும். குஜராத்தி மொழியும், மாராத்தி மொழியும் வழங்கும் பகுதிகளொழிந்த மேற்கிந்தியப் பகுதியும், தக்கணப் பகுதியும், ஒரிஸா நாடும் நீங்காலாக, விந்தியமலைக்கும், நருமதை யாற்றிற்கும், குமரிமுனைக்கும் இடைப்பட்ட தென்னிந்தியப் பெரும்பகுதியிற், பண்டைக்காலத்திலிருந்தே, ஒரேமொழியின் கிளைகளாகிய பல திருந்தாமொழிகளைப் பேசும் குழுக்கள பலவற்றைக் கொண்ட மக்கட் பெருங்குழுவொன்று பரவி வாழ்ந்துவந்திருந்ததாகத் தோற்றுகிறது. விந்தியமலைக்கு வடக்கேயுங் கூட பலூச்சிஸ்தானம் வரையிலும், வங்காளத்தைச் சேர்ந்த இராஜ்மகால் மலைகள் வரையிலுங்கூட இம்மொழியினத்தைச் சேர்ந்ததாக எண்ணக்கிடக்கின்ற கிளைமொழிகள் சில வழங்கக் காணலாம்.