பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்யம் டர்னர்[1] என்ற அறிஞர் அவ்விருதிறத்தினரும் ஓரினத்தினர் என்று கொள்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். அவருடைய கூற்றிலிருந்து, அந்தமான் [2] தீவுகளிலும், பிலிப்பைன் [3] தீவுகளிலுமுள்ள நீக்ரோவரினத்தைச் சேர்ந்தவர்களுடன் திராவிடர்களை ஒன்றுபடுத்துவதும் முடியாதாகின்றது. டர்னரின் முடிபுகள் இவ்வாராய்ச்சித் துறையில் முடிந்த முடிபுகளாகவே கருதப்படுகின்றன.

அவ்வாறு கருதப்பட்டாலும், ஸர் உவில்லியம் ஹன்டர் [4] என்ற பேரறிஞர், திராவிடர்கள் இருகிளையினர் என்றும், முண்டாரி மொழித்தொகுதியைச் சேர்ந்த திருந்தா மொழிகளைப் பேசிய கோலேரியர்[5] என்பவர் ஒருகிளையும், தமிழ் மொழித் தொடர்புடைய மொழிகளைப் பேசிய உண்மைத் திராவிடர் மற்றொரு கிளையுமாவர் என்றும் ஆராய்ந்து புதிய தொரு கொள்கையைப் பின்னர் நிறுவியுள்ளார். மேலும், கோலேரியக் கிளையினர் இந்தியாவிற்குள் வடகீழ்ப்பகுதியூடு வந்து, விந்தியமலைக்கு வடக்கிலுள்ள மேட்டு நிலப்பகுதியிற்றங்கியவர்களென்றும், பின்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியூடு பஞ்சாபிற் புகுந்துவந்த திராவிடர்களால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களென்றும், இத்திராவிடர்களே தெற்கு நோக்கித் தொடர்ந்து முன்னேறிச்சென்று தங்கினார்களென்றும் அவர் கூறுவர். பலூச்சிஸ்தானத்தில்[6] வழங்கும் பிராகுவிமொழிக்குந் [7] தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளுக்கும் தொடர்புள்ளதென்று ஐயுறுதற் கிடனிருப்பதையும், சோட்டாநாகபுரியிலுள்ள மக்கள்பால் மங்கோலியக் குழுவினர்க்குரிய சில குழூஉச் சிறப்புக்கள் காணப்படுவதையுமே ஆதாரமாகக்கொண்டு இக்கூற்று எழுந்ததாகும்.


  1. 1. Sir William Turner.
  2. 2, Andamans.
  3. 3. Philippines
  4. 4. Sir William Hunter
  5. 5. Kalarians.
  6. 6. Baluchistan
  7. 7. Brahui