பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கால்டுவெல் ஒப்பிலக்கணம்


குஜராத்தியும், மராத்தியும், மராத்தியின் கிளைமொழியாகிய கொங்கணியும், ஒட்ரதேசம் அல்லது ஒரிஸா என்ற நாட்டார் பேசும் ஒரியாவும், வடமொழிச் சிதைவுகளுமாகிய இவை திராவிட மொழிகள் பேசுங் குழுவினரொழிந்த பிற இந்து மக்களால் ஆங்காங்குப் பேசப்பட்டுவரும் மொழிகளாம்.

இந்தியப் பெருநாட்டின் வட பகுதியிலேனும் தென் பகுதியிலேனும், எக்காலத்திலும் சமஸ்கிருதம் என்ற வட மொழி உண்ணாட்டு மொழியாக வழங்கியிருத்தல்கூடும் என்று நம்புவதற்கில்லை. இருந்தாலும், தென்னிந்தியப் பகுதியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு [1]கோட்டத்திலுமுள்ள பார்ப்பனக் குழுவினருள் ஒரு சிலராலாவது, அது படிக்கப்பட்டும், பொருளுணரப்பட்டும் வருகின்றது என்பதுமட்டும் உண்மை.

இப்பார்ப்பனக் குழுவினர் பன்னூறாண்டுகளுக்குமுன் இந்நாட்டிற் குடியேறிய பார்ப்பன வந்தேறிகளின் வழியினராகும். இவர்களுடைய கூட்டுறவினால் திராவிட மக்களின் நல்வாழ்க்கைக்குரிய கலைப்பகுதிகளும் இலக்கியத் துறையும் ஓரளவிற்குச் செப்பமுற்றுச் சீர்திருந்தியுள்ளனவென ஒப்புக் கொள்ளல்வேண்டும். பார்ப்பனர்களாகப் பிறந்து அவர்கட்குரிய தொழிலாகிய வேதமோதுதல், கருமஞ்செய்தல் முதலியவற்றை மேற்கொண்டுள்ள சிற்சிலர், பொதுவாக, வட மொழி நூல்களைக் கற்றறிந்து அவற்றைத் தாந்தாம் உறையும் நாட்டிடை வழங்குவதான உண்ணாட்டு மொழியில் எடுத்து விளக்கும் ஆற்றல் வாய்ந்திருந்தனர். இத்தகையினர் அவரவர் வாழும் நாட்டுப் பகுதிக்கேற்பத் திராவிடப் பார்ப்பனர், ஆந்திரப் பார்ப்பனர், கன்னடப் பார்ப்பனர் என்று அழைக்கப் பெற்றனர். நாளாவட்டத்தில் அவரவர்கள் பேசிவரும் மொழி வேற்றுமை வாயிலாக இப்பார்ப்பனக் குழுவினர் தத்தமக்குள்ளேயே மாறுபாடு மிகுந்த இனவேற்றுமையை எய்த


  1. 1. District.