பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள்

191

பியல்புகளைக் காட்டுவதான பின்வருங் குறிப்பு தமிழில் மொழி பெயர்த்துத் தரப்படுகிறது :-

“திராவிட மொழிகளில் உயிரில் பொருள்களும், அறிவில் உயிர்களுமாய அஃறிணைப் பெயர்களெல்லாம் பொதுப் பாலனவே. படர்க்கைச் சுட்டு, குறிப்புப் பெயரெச்சம், படர்க்கை வினை ஆகிய இவற்றிற்கு அம் மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பால்வேறுபா டில்லை; ஏனைய எல்லாப் பெயர் வினைகளும் பால் குறித்தனவே. திராவிட மொழிப் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்குங் காலத்துச் சாரியை அல்லது உருபுச் சொற்களின் பிற்சேர்ப்பினாலேயே வேற்றுமை யடைகின்றன. பால்பகா வஃறிணைப் பெயர்கள் பெரும்பாலும் பன்மை குறித் தெழுதப் படா. திராவிட மொழிகளில் சாரியை, இடைநிலை, உருபு முதலியன பெயர் வினைச் சொற்களுடன் பின்னிணைப்புப் பெறுவனவேயன்றி முன்னிணைப்புப் பெறுமாறில்லை. உரிச் சொற்கள் வேற்றுமை ஏலா; ‘இந்திய-ஐரோப்பிய[1] மொழியினத்தைப் போலன்றி இத் திராவிட மொழிகளின் தனிச் சிறப்புக்களிலொன்றென்ன வென்றால், வேண்டுமிடத்துப் பண்புப் பெயரென்னும் உரிச் சொற்களை விடுத்துப் பெரும்பாலும் வினையெச்சங்களையே உரிச் சொற்களைப் போன்று இவை பயன்படுத்துகின்றன என்பதேயாம். முண்டா மொழியினத்தைப் போன்று திராவிட மொழியினத்திலும் தன்மை முன்னிலைப் பன்மைப் பெயர்களுக்கு இரண்டிரண்டு சுட்டுப் பெயர்கள் அமைந்துள ; அவை முன்னிலையை உட்படுத்தியதும், உட்படுத்தாது விலக்கியதுமான இருவகையாம். செயப்பாட்டு வினை என்பது பொதுவாகத் திராவிட மொழியினத்திற்கில்லை. ‘படு’ என்னும் வினை முதலைச் சேர்த்தே இஃது இக்காலை குறிக்கப்பட்டு வருகிறது.


  1. 1. Indo-European.