பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வட இந்திய மொழியினங்கள்

205

ராகும். இதுவே முஸல்மான்களின் தாய்மொழி. மீடிக் என்பதோ அவெஸ்தா இனத்தாருக் குரியதாகும்; பஷ்டோ, வேளாக் என்ற இருபெரு ஈரானிய மொழிகளும் அதனுடைய கிளைமொழிகளேயாம்.

இனி இங்கிய—ஆரியத்தை நோக்குவாம். வடமொழி நில நூற்படி இந்தியா “மத்திய தேசம்” அல்லது நடுநாடு என்றும், இதரதேசம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ”மத்திய தேசம்” என்பதே வடமொழி நூல்களில் அடிக்கடி ஆரியர்களின் இந்தியத் தாயகமாகப் போற்றப்பட்டுள்ளதாகும். இதர தேசமாகிய பிறபகுதிகளிலெல்லாம் காட்டுமிராண்டிகள் வசித்து வந்தார்களெனவே “மத்தியதேச” ஆரியர்கள் கருதிவந்தனர். இந்த “மத்திய தேசம்” என்பது வடக்கில் இமயத்தையும், தெற்கில் விந்தியத்தையும், மேற்கில் கீழைப் பஞ்சாபையும், கிழக்கில் கங்கை யமுனைக்கூடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு பெரும் பகுதியாகும். இப்பகுதியினர் பேசிவந்த மொழி செளரசேனி என்ற பண்டைப் பாகதமாகும். இச் செளரசேனி இந்தி மொழியின் பெரும்பகுதியாகிய மேலை இந்திக்குத் தாய் மொழியாம். இந்திய-ஆரிய மொழியினத்தைச் சேர்ந்த இச்செளரசேனியே பின்னர் “மத்திய தேசத்” திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே, மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமஸ்கிருதம் (அல்லது செம்மை செய்யப்பட்டது) என்று பெயர் பெறுவதாயிற்று. இச்செம்மைப்பாடு கி.மு. 300-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பாணினி இலக்கணத்தில் உருப்பெற்றது. எனவே, கற்றோரால் இலக்கண முறைப்படி திருத்திச் செம்மை செய்யப்பெற்ற ஆரியப் பாகதங்களே “சமஸ்கிருதம்” என்பது ஒருவாறு விளங்கும்.