பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது“திராவிட மொழிகள்”

7

டுள்ளது. மேற்குறித்த குடிகளில் தென்னிந்தியாவிற்குரியராவார் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களே. இதனால் தென்னிந்தியப் பகுதியிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் பொதுப்படையாகக் குறிப்பதற்கு “திராவிடம்” என்ற குறியீடு எடுத்தாளப்பட்டுள்ளமை தெளியலாகும். ஒருகால் திராவிடப் பெருங்குழுவைச் சேர்ந்த பெருங்குடிகளில் யாதாமொரு பெருங்குடி மேற்குறித்த பட்டியில் சேர்க்கப்படாமல் விலக்கப்பட்டிருத்தல் வேண்டுமானல் அஃது “ஆந்திரர்” என்ற பெருங்குடியே யாதல் வேண்டும். ஏனெனிற் கூறுதும். ஐத்ரேய பிராமணத்தில் விசுவாமித்திரரின் வழித்தோன்றல்களாய் வந்து விருஷலர்களானவர்களைக் குறிக்குமிடத்து, புண்டரர், சபரர், புளிந்தர் என்பவரோடு “ஆந்திரர்” என்றும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்களை ஒருவாறு விலக்கியதாகக் கொண்டாலும், மனுஸ்மிருதியில் “திராவிடம்” என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்களனைவரையுங் குறித்து நிற்பது பெறப்படும்.

இனி, இந்தியப்பெரு மூதாதைகளில் ஒருவரான சத்திய விரதர் என்பவரைக் குறிக்குமிடத்து, பாகவத புராணம் “திராவிட மன்னர்” என்றே குறிக்கின்றது.

இனி, ஸ்மிருதிகாலத்திற்குப் பின்னர் வந்த மொழியாராய்ச்சியாளர்களும் “திராவிடம்” என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர். இந்தியப் பாகதமொழிகளைத் தொகைப்படுத்தி இனம் பிரித்த பண்டையாராய்ச்சியாளர் மூலபாகதங்கள் மூன்றென்றும், அவை, மகாராஷ்ட்ரி, செளரசேனி, மாகதி என்றும் பிரித்தனர். இம் மூலபாகதங்களுக்கு அடுத்தபடியாக வைத்துக் கருதப்பட்ட பாகதமொழித் தொகுதியில் “திராவிடி” என்னும் பெயரால் திராவிட மொழியினஞ் சேர்க்கப்பட்டுள்ளது. வடமொழி மூலநூல்களைத் தொகுத்து