பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

11

காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டதாய், பழவேற்காடு முதல் குமரிமுனை வரையிற் பரந்து கிடக்கும் பெருநிலப் பகுதியாகிய கருநாடகத்திற் பேசப்படுவது தமிழ். தென் திருவாங்கூர்ப் பகுதியிற் குமரிமுனை தொடங்கித் திருவனந்தபுரம் வரையிலும் தமிழ் பேசப்பட்டு வருகிறது. ஈழத்தின் வடமேற்குப் பகுதியிலும் அது வழங்குகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் ஈழஞ் சென்று குடியேறினர் என்பதற்குச் சான்றுகள் உள. ஈழத்திலுள்ள காப்பித்தோட்டக் கூலிகளிற் பெரும்பாலோர் தமிழர்களே. கொழும்பு நகரிற் பொருள் திரட்டும் வணிகர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சென்னை மண்டிலத்தின் பற்பல பகுதிகளிலுறையும் ஐரோப்பியப் பெருமக்களின் வீட்டு வேலைக்காரர்களும், பணியாளர்களும் தமிழர்களே. இதனாலேயே தென்னிந்தியக் கோட்டங்கள் பலவற்றிலும் வழங்கும் மொழி எதுவாயிருந்தாலும் ஆங்காங்குப் படை மக்கள் உறையும் பகுதிகளிலெல்லாம் தமிழே வழங்கி வருகிறது. மலையாள காட்டுக் கண்ணனூரிலாதல், கன்னட நாட்டுப் பெங்களூரிலாதல், தெலுங்கு நாட்டுப் பல்லாரியிலாதல், இந்துஸ்தானி நாட்டுச் சிக்கந்தராபாத்திலாதல் ஆங்காங்குத் தமிழ்மொழி பயிலக் காண்பதும் இதனாலேயாம்.

பெகு, பினுங்கு, சிங்கப்பூர் முதலிய கீழைநாடுகளிற் காணப்படும் கலிங்கர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. மோரீசுக்கும் மேலை யிந்தியக் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றுள்ள கூலிமக்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சுருங்கக்கூறின், பொருள்திரட்டும் வழியமைந்துள்ள இடங்களிலெல்லாம் தமிழர்களைக் காணலாம்; சோம்பேறிகளாய், நகத்தில் அழுக்குப்படாமல் வாழவிரும்புஞ் செல்வர்கள் இருக்குமிடங்களிலெல்லாம் தமிழர்களை அணியணியாய்க்

[1]


  1. 1. Districts.