பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

அல்லது தமிழ்” என்றே குறித்துள்ளனர். இதனாலும் தமிழ் என்பதே சரியான மொழிப்பெயர் என்று எளிதில் ஊகிக்கப்பெறும்.

தமிழ் என்னுஞ் சொல்லுக்கு.நேர் வடமொழிச் சொல் திராவிடம் என்பதாம். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒருங்கே குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலிவடிவிற்கும் திராவிடம் என்ற சொல்லின் ஒலிவடிவிற்கு மிடையே எத்துணையோ வேறுபாடு காணப்படினும், இரண்டும் ஒரே வேரிலிருந்தே பிறந்ததாகக் கருதுவதற் கிடமுள்ளது. இக் கருத்து ஒப்புக்கொள்ளப்படின், தமிழ் என்ற சொல்லே பின்னர் திராவிடம் எனத் திரிபுற்றது என்று கூறுவதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல் தான் தமிழ் என்று பின்னர்த் திரிபுற்றது என்று கூறுதல் எளிதும் நேரிதுமாம்.[1]இந்திய நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் ஒரு மக்கட் பகுதியினர் தங்களையே குறிப்பதற்குக்கூடத் தமிழ் மொழியை யொழித்து வடமொழியாகிய திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டிருப்பர் என்றோ, அன்றி அவர்தம் நண்பர்களான அயல்நாட்டினரும் அவர்களை அப்பெயராலேயே குறித்திருப்பர் என்றோ கொள்ளுதல் பிழைபாடுடையதாகத் தோற்றக்கூடும். தமக்கெனத் தம் மொழியிற் பெயரொன்றில்லாது பிறமொழிப் பெயரொன்றைத் தேடி அமைத்துக் கொண்டார் ஒரு மக்கட் பகுதியினர் எனின் யார்தான் முதலில் எளிதில் நம்ப ஒருப்படுவர்! ஆனல் இதுவே உண்மையென்று கருதவேண்டியதாக வுள்-


  1. கால்டுவெல் துரைமகனாரே சங்காலத்திலிருந்த தமிழ்ப் புலவர்கள் இம் முடிபை ஒப்புக் கொள்ளவில்லை என்று பின்னர்க் கூறியுள்ளார். இக் கால - ஆராய்ச்சிப் புலவர்களும் இதனை ஒப்புக்கொள்ள முன்வராமை வியப்பன்று.