பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

15

ளது. திராவிட நாட்டின் தென்பகுதிக்குப் பாண்டியநாடு என்ற பெயருள்ளது. அப்பெயர் வடமொழிப் பெயரே. இன்னும், சோழம், கேரளம், ஆந்திரம், கலிங்கம் என்ற எல்லாம் வடமொழிச் சொற்களாகவே தோற்றுகின்றன. கருநாடகம் என்ற ஒரு சொல்மட்டும் தனித்தமிழ்ச் சொல்லாகக் கொள்ளப்படும். மேற்குறித்த பெயர்களெல்லாம் வடமொழி அகராதிகளிற் காணப்படினும் அவற்றின் வேர்ப் பொருள் என்ன என்பது அவ்வகராதிகளிற் குறிக்கப்பட வில்லை. இதனால் அப்பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்கள்,தான் என்று துணிந்து கூறுவதற்கு மியலாதிருக்கின்றது. எனவே, இவை வடமொழிப் பெயர்களாகவே தோற்றுகின்றன என்ற அளவில் இவ்வாராய்ச்சி நின்றுவிடுகிறது. இனி,ஆந்திரம் என்ற சொல் பிராமணங்கள் ஒன்றனுள் எடுத்தாளப்பட்டிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. ஆயினும், அந்தச் சொல்லின் உண்மைப் பொருள் என்ன என்பது யாண்டும் விளக்கப்படவில்லை. வேதங்களுட் காணப்படும் பல பெயர்களுக்குப் பொதுவாகவே பொருள் விளங்குவதில்லை. ஆதலால் இப்பெயர்களெல்லாம் வடமொழிக்கு முற்பட்ட ஒரு வடஇந்திய மொழியினின்று பெறப்பட்டனவோ என்று ஐயுறவேண்டியதாகவு மிருக்கின்றது. திராவிடம் என்ற சொல்லின் முதலிலுள்ள திரா என்ற பதத்திற்கு நேர் வடமொழி த்ர் என்பதாகும். இது திராவிட மொழி யியல்புக்கே அப்பாற்பட்ட ஒரு கூட்டொலியாம்.

திராவிடம் என்ற சொல் திரமிடம் என்று பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. திராவிடம் என்பது திரவிடம் எனக் குறுகி, திரவிடம் திரமிடம் என்றாயிற்று என முடிபு செய்தல் ஒருவாறு பொருந்தும். இந்த இரு சொற்களும் தமிழில் வழங்குகின்றன ; எனினும் திரமிடம் என்ற சொல்லே தமிழ் நிகண்டுகளில் முதலிடம் பெறுகின்றது.