பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

19

பாண்டியர்களின் முதல் தலைநகரம் பொருநைக் கரையிலிருந்த கொற்கை என்பதாகும்; இரண்டாந் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில், [1]மட்ரா என்று காணப்படுவதும், ஆங்கிலக்கில் [2]மதுரா என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் [3]மெதொரா என்று குறிக்கப்படுவதும் இத் தமிழ் மதுரையேயாம். பாரதப் பெரும்போர் முடிந்த பின்னர் பாண்டியர்களின் ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இம் மதுரையேயாம். ஆனால், வடமொழி நூலாகிய [4]ஹரி வமிசத்தில் இது தென் மதுரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழ நாட்டில் ஒரு [5]மதுராவும், கீழை இங்கியத் திட்டுகளில் ஒரு மதுராவும் இருக்கின்றன. இம் மதுரை மன்னர்களைப் பாண்டியர்கள் என்றும், சிற்சில இடங்களிற் பாண்டு என்றும் சிங்கள மகாவமிச நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதனாலும், இப் பெயருக்கும் வடமொழிப் பாண்டு என்ற சொல்லுக்கும் தொடர்பிருந்ததாகக் கருதிக் கோடல் பிழையாகாது. பாண்டியர் என்பது அரசுரிமை பூண்ட ஒரு முதுகுடியின் பெயராகவே முதற்கண் இருந்திருத்தல் வேண்டும்.

இனி, [6]மெகாஸ்தெனீஸ் என்பவர் தம்முடைய வரலாற்று நூலிற் [7]பண்டையீ என்ற இந்திய நாடொன்றைக் குறித்து எழுதியுள்ளார். அந்நாட்டிற்கு அப் பெயர் இந்திய வீமனாகிய கிருஷ்ணன் என்பவனுடைய ஒரே மகளின் பெயரைப்பற்றி இடப்பட்டதாகும் என்று அவர் குறித்துள்ளார். அவர் குறித்துள்ளது பாண்டிநாட்டையே என்பது பற்றி எட்டுணையும் ஐயமின்று. [8]அந்தாரீ” ”கலிங்கீ” என்ற பெயர்களைக் கேட்டறிந்துள்ள அவர் பாண்டியர்களைப்பற்றிக்


  1. Mutra
  2. Madura
  3. Methora
  4. Harivamsa
  5. Matura
  6. Megusthenes
  7. Pandaii
  8. The Andarae and Calingae