பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

21

குறிப்பிட்டது [1]பாண்டிய நாட்டையே என்பது பொருந்தும்.

சோழர்:- சோழர் என்ற பெயர்க் காரணம் நன்கு புலப் படவில்லை. அசோகர் கல்வெட் டொன்றில் அது. [2]சோட் என்று காணப்படுகிறது. சாளுக்கிய மரபினரின் தெலுங்கு, கல் வெட்டுகளிலும் அஃது அவ்வாறே காணப்படுகின்றது. தெலுங்கர் அதைச் சோளர் என்று மொழிகின்றனர். இந்நாட்டை ஹியூன் சியாங் என்ற சீன யாத்திரிகர் “சோழிய நாடு” என்று குறிக்கின்றனர். இஃது எவ்வாறு சோழ நாட்டோடு பொருந்தும் என்பது விளங்கவில்லை[3]. ஆனால் கி. பி. பதினோராம் நூற்றாண்டில் வடசர்க்கார்க் கோட்டங்கள் சோழர் அரசாட்சியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடற் பாற்று. சோழர்களின் பழைய நாடு காவிரிக் கரையிலுள்ள செழுமை வளம் நிறைந்த தஞ்சை திருச்சிக் கோட்டப் பகுதிகளாகும். பின்னர் அவர்கள் காவிரிக்கு வடக்கேயுள்ள தமிழ் நாடு முழுதையும் ஒருகாலத்திற் கட்டி ஆண்டுவந்தனர். அவர்களுடைய தலைநகரம் முதலில் உறையூர்ப் பதியாம். உறையூர் உறைவிடம் என்றே பொருள்படுதற் காண்க. இவ் வூருக்குக் கோழி யென்றும் ஒரு பெயருண்டு. கி. பி. பதினோராம் நூற்றாண்டிற் சோழராதிக்கம் உச்ச நிலையி லிருந்தது. அவர்கள் தமிழ்நாடு முழுதிலுமே யன்றிப் பாண்டிய நாடு, சேர நாடு, ஈழ நாட்டின் வட பகுதி,


  1. அருச்சுனன் பாண்டி நாட்டரசி அல்லியை மணந்ததும், அல்லி பாண்டிநாட்டு ஆட்சி நடத்தி வந்ததும் ஈண்டுக் குறிப்பிடற் பாற்று
  2. Choda
  3. சோழ நாட்டு மக்கள் சோழியர் எனப்படுவர். வேளாள வகுப்பினர் சோழநாட்டிற் சோழிய வேளாளர் என்றும், பாண்டிய நாட்டிற் பாண்டிய வேளாளர் என்று பெயர் பெறுவர். “முன் குடுமிச்சோழியா” என்ற காளமேகப் புலவரின் வாக்கையும், நோக்குக.