பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வின்பாற்பட்டன. இப் பிரிவு கேரளம் என்ற வடமொழிப் பெயரையே கையாண்டதாகத் தெரியவில்லை. சேரம் என்றும், கொங்கு என்றுமே அது தன்னேக் குறித்துவந்துள்ளது. எனினும், கேரளம் என்பதற்கும் சேரம் என்பதற்குமிடையே வேறுபாடொன்று மில்லை. இரண்டும் ஒன்றே. சேரநாட்டெல்லை குறித்த தமிழ்ப் புலவ ரெல்லாரும் கள்ளிக்கோட்டை என்ற கோழிக்கோட்டின் தென்பாலுள்ள மலையாளக் கரையை யடுத்திருக்கும் பகுதி யெல்லாம் சேரநாடென்றே குறித்துள்ளனர். கேரம் என்ற சொல்லிலிருந்தே கேரளம் என்ற வடசொற் பிறந்திருத்தல் வேண்டும். கொங்கு என்பது, குடகு என்பதைப் போன்று, வளைந்தது கோணலானது என்றே பொருள்படும். மலையாள நாட்டு இயற்கை யமைப்பை யொட்டி இப் பெயர் உண்டாயிருத்தல் எளிதில் உய்த்துணரப்படும். கேரம் என்ற சொல்லுக்கு. மலையாள மொழியில் “தென்னைமரம்” என்ற பொருளுளது. மலையாள நாட்டில் தென்னைகள் சிறப்பாக வளர்ந்து பெருகி யிருக்கின்றமை பற்றி ஒருவாறு இம் மரத்தினாலேயே அந்நாட்டிற்கு அப் பெயர் வந்த தென்று கூற முன்வரலாம் ; எனினும் மரத்தின் பெயரை யொட்டி நாட்டிற்குப் பெயர் வந்ததாஅன்றி நாட்டின் பெயரை யொட்டி மரத்திற்குப் பெயரிடப்பட்டதா என்பது சிக்கலான ஒரு கேள்வியேயாகும்.

மலையாளம் :

இனி, மலையாளம் என்ற சொல்லை யொட்டிய எச்சொல்லும் பண்டைக் கிரேக்க ஆசிரியர்களால் குறிக்கப்படவில்லை. கி. பி. 545-ஆம் ஆண்டிற் குரியது என்று கருதப்படுவதான 1“கிறித்தவ ஊர் வரலாறு” என்ற கிரேக்க நூலில் ஈழநாட்டைக் குறித்து எழுதிவருமிடத்து அதனை

1. Christian Topography of Cosmas Indicopleustes.