பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—மலையாளம்

29

யடுத்துள்ள நாடுகளில் “மிளகுவரும் மலே” என்ற ஒரு நாடுங் குறிக்கப்பட்டுள்ளது. இச் சொல் மலையென்ற தமிழ்ச் சொல்லுடன் பொருத்தமாக இருப்பது எளிதிற் புலனாகும். மலை, மலைநாடு போன்ற சொற்கள் அக்காலை ஈழநாட்டிற் குடியேறியிருந்த தமிழர்களால் பெருவாரியாக வழங்கப்பட்டிருத்தல் கூடும். இன்றும் அங்கு அவை வழங்குவனவே. மலை என்ற அச்சொல் மலையாளத்தில் மலெ என்றே வழங்குவதாம்.

மலையாள மொழி தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே “உதித்தெழுந்த” கிளைமொழியே. ஆயினும், தமிழில் காணப்படும்[1] ஐம்பால் விகுதிகளை அம்மொழி ஒதுக்கியுள்ளது ; மேலும், அளவுகடந்த வடமொழிச் சொற்களைக் தன்பாலேற்று அம்மொழி பயன்படுத்தி வருகின்றது. இவையே அம் மொழிக்கும் தமிழுக்குமுள்ள தலையாய வேறுபாடுகளாம். இவ் வேறுபாடுகள் நோக்கியே, மலையாளம் தமிழின் இனமொழியா அன்றிக் கிளைமொழியா என்ற ஐயப்பாடு எழுந்ததாகும். இனமொழி என்று கொள்வதினும் கிளைமொழி என்று கொள்வதே ஏற்புடைத்தாம்.

தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே மலையாள மொழி பிரிந்ததாயினும், தமிழ்மொழியின்மாட்டுக் காணப்படும் மொழி வளர்ச்சியும், திருத்தமும், அதன்கண்ணும் காணப்படுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழிர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கடந்து சென்று மேலைக் கடற்கரையில் வசித்துவந்துள்ளமையால் இத்தொடர்பு காணப்படுகின்றது என்று எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.[2] “பெரிப்ளூஸ்” ஆசிரியர் மேலைக் கடற்


  1. 1. போகிறேன். போகிறாய், போகிறான், போகிறது. போகின்றன என்ற ஐவேறு தமிழ் வினைச்சொற்களும் மலையாளத்தில், “போகுன்னு” என்ற ஒரே வினைச்சொல்லாற் குறிக்கப்படும்.
  2. 2. Periplus.