பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தெலுங்கு

37

மோர்ஸ்பீ[1] முதலியோர் இதனை மலெ என அழைத்தனர். சிங்களரும் இதனை மல்திவ மென்றே வழங்கினர். “பார்” என்பது நாடு, கண்டம் என்று பொருள்படுவதை நோக்க மலெ என்ற பொதுப் பெயருடைய தீவுகளையும் தலைநிலத்தையும் பிரித்தறியவே மல தீவுகள், மலபார் என வேறுபடுத்தி உரைத்தனரோ என்று நினைக்க இடமுண்டு. ஆனால் தமிழில் மல் என்பது மால என வழங்குவது புதுமையானது. இபின் பதூதா[2] என்பவர் மால தீவங்களை திபத் அல் மஹால்[3] என அழைப்பதிலிருந்து தமிழ் ”மால்” என்பது ”மஹால்” என்பதன் மரூஉ என்று கூறலாகும். மஹால் மால் ஆதல் தமிழ் ஒலியியற்படி இயற்கையே என்க.


III. தெலுங்கு

தொன்மைச் சிறப்பிலும், சொல்வளத்திலும் தெலுங்கு மொழியைத் தமிழுக்கு அடுத்தபடியாகக் கூறலாம். மொழி யினிமையை நோக்கின் அது தமிழினுஞ் சிறந்த தொன்றாகவே மதிக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் முதலில் தெலுங்கு மொழியை "ஜெண்ட்டூ” என்று அழைத்து வந்தனர். வர வர அது வழக்கொழிந்தது.

தெலுங்கு மொழி பழவேற்காடு தொடங்கிச் சிக்கை குளம்[4] வரையிலுள்ள நிலமூக்கின்[5] கீழ்க்கரையிலும், மேற்கே மராட்டிய நாட்டின் கீழெல்லை தொடங்கி மைசூர் வரையிலும் பேசப்பட்டு வருகிறது; வட சர்க்கார்க் கோட்டங்களும்[6], கர்நூல் கோட்டமும், நிஜாம் நாட்டிற் பெரும் பகுதியும், நாகபுரி நாடும், கோண்டு வனமும்[7] இதனுள் அடங்கியனவாம். இந் நிலப் பகுதியை முகம்மதியர்கள் தேலிங்காணம் என் றழைத்துவந்தனர். தொலைநாடுகளுக்


  1. Morseby
  2. Ibn Batuta
  3. Dhibat al-Mahal
  4. Chicacole
  5. Peninsula
  6. Ceded Districts
  7. Gondwana