பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

குத் தொழில் கருதிச் செல்வதையும், பிற நாடுகளிற் சென்று குடியேறுவதையும் தெலுங்குமக்கள் வரவரக் குறைத்துக் கொண்டு வங்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். திராவிடக் குழுவினருள் எண்ணிக்கை மிகுந்த இனத்தினர் தெலுங்கர் என்று ஐயமின்றிக் கூறலாம். தமிழ்நாட்டில் நாயக்கர்கள் (வடமொழி நாயகர்கள்) என்றழைக்கப்படு வோரும், ரெட்டிகளும் தெலுங்கர்களே. இவர்கள் ஏறக் குறையப் பத்து நூறாயிரவர் உள்ளனர். இவர்களையும் மைசூரிற் குடியேறியுள்ள தெலுங்கரையும் சேர்த்துக்கொண்டால், தெலுங்கு பேசும் மக்களின் மொத்தத் தொகை 2,30,00,000 ஆகும். நிஜாம் நாட்டில்மட்டும் இருக்கும் தெலுங்கர் தொகை, 1911 கணக்குப்படி, 60,00,000 ஆகும்.

இன்று தெலுங்கர் தமிழரைப் போன்று திரை கடல் கடந்து பொருளீட்டும் முயற்சியுடைய ரல்லராகக் காணப்படினும், பண்டைக் காலத்தில் இத் துறையில் தமிழருக்கு வழிகாட்டியா யிருந்தவர்கள் அவர்களே யாவர். இன்றும் மலாய் நாட்டினர் தமிழரைக் குறிக்க வழங்கும் கிளிங்[1] என்ற சொல் கலிங்கம் என்பதன் மரூஉ. கலிங்கம் என்பது தெலுங்குநாட்டு நெய்த னிலத்திற்குப் பெயர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்டுமுன் சுமத்ரா, ஜாவா என்னும் திட்டுகளுக்குச் சென்று குடியேறி ஆங்குக் கோயில்கள் கட்டி வாழ்ந்துவந்த சென்னை மண்டில மக்கள் தெலுங் கர்களே என்று கருதப்படுகின்றனர்.

வடமொழி வாணர் தெலுங்கை ஆந்திரம் என்றழைப்பர்; ஆந்திரர்கள் பேசும் மொழி ஆந்திரம். தெலுங்கர் பண்டைக் காலத்திலிருந்தே ஆந்திரர் என்றும், கலிங்கர் என்றும் இரு பிரிவினராக வாழ்ந்து வந்துள்ளனர். கலிங்கர்களை விட ஆந்திரப் பிரிவினரே பண்டைய ஆரியர்களுக்கு மிக்க


  1. Kling