பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தெலுங்கு

39

அறிமுகமானவர்கள். இருக்கு வேதத்தின் கிளையாகிய ஐதரேய பிராமணத்தில்[1] ஆந்திரர்கள் என்ற மக்கள் முதன் முதலாகக் குறிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் நாகரிகமற்ற ஓரினத்தார் என்று அந் நூல் கூறுகின்றது. புராண காலத்தில் ஆந்திர அரச பரம்பரையொன்று வட இந்தியப் பகுதியில் ஆட்சி செலுத்திவந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மெகாஸ்தனீசுக்குப் பின்வந்த பிளைனி என்பார் “அந்தாரி” என்போர் ஆற்றல் மிகுந்த ஒரினத்தார் என்று குறிப்பிடுகின்றார். பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற உரோம நிலப் படங்களில் ஆந்திர இந்தி என்ற ஒன்று (கங்கைக்கு வட பகுதியில்) இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது என்று முன்னர்க் காட்டப்பட்டது. ஆந்திரர்களின் மொழியைப் பற்றி முதற்கண் குறித் தெழுதியவர் ஹியூன் சியாங் என்ற சீன யாத்திரிகரே. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்த அவர், ஆந்திரர்களின் மொழி மத்திய இந்தியமொழியினும் வேறுபட்ட தொன்று என்றும், ஆனால் அதன் வரி வடிவமோ மத்திய இந்தியமொழியின் வரி வடிவத்தைப் பெரும்பாலும் ஒத்ததே என்றும் குறித்துள்ளார். எனவே, ஆந்திர மொழி கலைத்துறையில் ஒருவாறு அக் காலத்தி லேயே வளர்ச்சியுற் றிருந்தது என்பதும், அதனாலேயே ஆந்திரர் என்ற பிரிவினர், கலிங்கர் என்ற பிரிவினரை நோக்க, நாகரிகத்தில் மிக்கவராக வடமொழி வாணராற் கருதப்பட்டு வந்தனர் என்பதும் எளிதிற் பெறப்படும். ஹியூன் சியாங் காலத்திற்குப் பின் வந்தவரான குமாரில பட்டர் என்பார் “ஆந்திர திராவிட பாஷா” என்று திராவிட மக்கள் பேசும் மொழியைக் குறித்ததும், கலிங்க திராவிட பாஷா என்றே, திரிலிங்க திராவிட பாஷா என்றே குறிக்காததும் கருதற்பாலன.


  1. Aitareya Brahmana of the Rig Veda