பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இம் மொழி வழங்கிவருகிறது. மலபார்க் கரையிலுள்ள கானரா என்னும் கன்னடியக் கோட்டத்தில், மலையாளம், துளு, கொங்கணி ஆகிய மொழிகளுடன் கன்னடமும் பேசப்படுகிறது. நீலகிரியிலுள்ள வடகர்[1] என்னும் பெருந் தொகை மக்கள் பேசுவது பழைய கன்னடமே. இம் மொழி பேசுவோரின் மொத்தத் தொகை 1,05,00,000.

கர்நாடம் அல்லது கர்நாடகம் என்ற சொல் முதற்கண் தெலுங்கு, கன்னடம் என்ற இரண்டு மொழிகளையுங் குறிப்பதற்கே பொதுப்பட வழங்கப் பெற்றது; பின்னர், தெலுங்கை நீக்கிக் கன்னடத்தை மட்டுமே அது குறிப்பதாயிற்று. கர்நாடகம் என்பது வடமொழிச்சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும், டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நாடு+அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச் சொல் என்று கொள்வதே சிறப்பாகும்.

தமிழிற் செந்தமிழ், கொடுந் தமிழ் என்ற இரு பிரிவுகள் இருப்பன போன்று கன்னடத்திலும், பழைய கன்னடம் என்றும், புதுக் கன்னடம் என்றும் இரு பிரிவுகள் உள்ளன. இப் பிரிவுகளுக்கிடையேயுள்ள வேறுபாடு தமிழையும் மலையாளத்தையும் போன்று வடமொழிச் சொற்கலப்பினால் ஏற்பட்ட தொன்றன்று; சொல்லாக்க முடிபுகளினாலேயே ஏற்பட்ட தொன்றாகும். பழைய கன்னடம் என்ற மொழியும், பழைய கன்னடம் என்ற வரிவடிவமும் ஒன்றன்று. அது வேறு, இது வேறேயாம். இரண்டையும் ஒன்றுடனொன்று கலத்தல் கூடாது. மைசூரிலும், மராட்டிய நாட்டிலும் காணப்படும் கல்வெட்டுகளிற் பல பழைய கன்னடம் என்னும் வரிவடிவத்தா லியன்றனவேயாம். ஹௗ கன்னடம் என்ற பழைய கன்னடத்திலுள்ள கல்வெட்டுக்


  1. Badagas