பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கால்டுவெல் ஒப்பிலக்கணம்


துளு மொழி பேசுவோரின் தொகை 5,00,000-க்கு மேற்பட்டதாகும். இருந்தாலும் அவரிடையே பல மொழிகள் வழங்குகின்றன. ஆதலால் துளு எங்கே ஒருவழியாய் மறைந்தொழிந்துவிடுமோ என்றுகூட ஐயுறலாம். இருந்தாலும் அது மறைந்தொழிதற்கான குறிகள் ஒன்றும் இதுவரைக் காணப்பட்டிலது. திராவிட மக்களுக்குள் மாறுதல் என்பதே வேண்டாத ஓர் இனத்தார் இருக்கக்கூடு மென்றால் அவர்கள் துளுவர்களே. ஆதலின் அவர்கள் தம் மொழியை மறைந்தொழியவும் விடுவரோ!

துளு என்பது பணிவு, அடக்கம் என்று பொருள்படும் என பிரிகெல்[1] என்ற கன்னட இலக்கண நூலாசிரியர் கூறு கிறார். இதிலிருந்து அச்சொல் அம் மொழி பேசும் மக்களையே யன்றி அம் மொழியைக் குறித்ததாகக் கொள்ள இடமில்லை.

மலையாள மொழியின் கிளை மொழியே துளு என்று எல்லிஸ்[2] நம்பினார். அவர் அவ்வாறு நம்பியதற்கு மலையாள மொழி அருகிற் பெரு வழக்கி லிருப்பதும், துளுவப் பார்ப்பனர்கள் வடமொழியில் எழுத மலையாள எழுத்துக்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதும் காரணங்களாகலாம். இக் காரணங்கள் சாலா. துளுவம் மலையாளத்தின் கிளையன் றென்று உறுதியாகக் கூறலாம். "துளு இலக்கணம்" வகுத்த பிரிகெல் இதைக் குறித்துப் பல உண்மைகளையெடுத்துக் கூறி விளக்கியுள்ளார். மலையாளத்திற்கும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாட்டைவிட மிகுந்த வேறுபாடு துளுவத்திற்கும் மலையாளத்திற்கு மிடையே உள்ளது. ஆனால் அதற்கும் கன்னட மொழிக்கு மிடையே அத் துணை வேறுபாடில்லை. குடகு மொழிக்கும் துளுவத்திற்கு மிடையிலுள்ள வேறுபாடோ மிகமிகக் குறைவு. தமிழ் மொழியிலிருந்தோ குடகு பெரிதும் வேறுபடுகிறது.


  1. Mr. Brigel
  2. Mr. Ellis