பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

பழங் கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்ட தெனத் தோற்றுகிறது. இம் மொழியின் இலக்கண மொன்றும் சில பாட்டுக்களும் மேஜர் கோல்[1] என்பவரால் வெளியிடப்பட்டுள்ளன.

“நீலகிரியிலுள்ள பண்டைக் குடிகளின் மொழிகளைப் போன்று இம் மொழியும் (குடகு) தன் தொன்மைப் பண்பு மாறாமல் இருந்து வருகிறதென்பதில் ஐயமில்லை. இஃது இம் மக்கள் பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்து வருவதனாலேயே யாகும். குடகு மக்கள் பண்டைக் காலத்திலேயே மேற்கு மலைத்தொடரிற் குடியேறிவிட்டனர் என்பது அவர்களிடையே இன்றும் ஒரு பெண் பல ஆடவர்களை மணந்து கொள்ளும் வழக்கமிருந்துவருவதனாற் புலப்படும். இவ் வழக்கம் பண்டைத் திராவிடர் வழக்கமாகும். இவர்களுக்கு இலக்கியமில்லை; பார்ப்பனர் பழக்க வழக்கங்கள் இன்றளவும் இவர்களிடைப் புகவில்லை” என்று பர்னெல்[2] எழுதியுள்ளார்.

இதுகாறும் விரித்துரைத்த ஆறு மொழிகளும் திராவிடக் குழுவினுள் திருந்தியவையாகக் கொள்ளக் கிடப்பன. இனிக் கூறப்போகும் ஆறும், இவற்றிற்கு மாறாகத், திருந்தாதன; அதாவது எழுத்தும் இலக்கியமும் இல்லாதன.


திருந்தா மொழிகள்

(I) துதம் :

துதம் அல்லது தொதம் என்பது நீலகிரி மலையிலுறையும் துதவர் அல்லது தொதவரின் மொழியாம். இவர்கள் தொகை எக்காலத்தும் ஒன்றி ரண் டாயிரத்திற்கு மிகுதியா யிருந்திருக்க முடியாது. அபினிப் பழக்கத்தாலும், பெண்கள் பல கணவர்களைக் கொள்ளும் முறையாலும், பெண்


  1. Major Cole
  2. Burnell's “Specimens of South Indian Dialects: No. 3."