பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இம் மொழிக்குரிய இலக்கணச் சுருக்கம்[1] ஒன்று எழுதியுள்ளார்.

இவர்கள் தங்களைக் குர்ங்கர்கள்[2] என்று கூறிக்கொள்கின்றனர். கொங்கணத்திலிருந்து வந்ததாகவும், ரோதா[3] மலைகளிலும் பாடலிபுரக் கோட்டத்தை யடுத்த மலைகளிலும் நெடுநாள் வாழ்ந்திருந்ததாகவும், அங்கிருந்து துரத்தப்பட்ட பொழுது இராஜ்மஹால் மலைகளுக்கு ஒரு பகுதியினரும், சூடிய நாகபுரி மலைகளுக்கு மற்றொரு பகுதியினருமாகச் சென்று குடியேறியதாகவும் அவர்கள் கூறிக்கொள்கின்றனர். மொழி யொற்றுமைகளும், பழக்க வழக்க வொற்றுமைகளும் இதனை வலியுறுத்துகின்றன. மூண்டர்களும் கோலேரியர்களும் வந்து குடியேறுவதற்கு முன்னரே ஒராவோனியர்கள் சூடிய நாகபுரியில் வந்துவிட்டார்கள் என்பது வழக்காறு.

துதம், கோதம், கோண்டு முதலிய மொழிகள் திருத்தமற்றவையா யிருந்தபோதிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய திருந்திய மொழிகளைப் போலவே அவை தூய திராவிட மொழிகள் என்பதில் ஐயமில்லை. அவற்றிற் கடுத்தபடியாக, இராஜ்மஹால், ஒராவோன் என்ற இரண்டு மொழிகளையும் திராவிட மொழிகளாகக் கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் சுட்டுப் பெயர்கள், முதல் நான்கு எண்கள் போன்ற இன்றியமையாச் சொற்களை உள்ளிட்ட முதற் சொற்களில் பெரும்பாலானவை திராவிடச் சொற்களே யாயினும் அவற்றோடுகூடப் பிற குழுச் சொற்களும் கலந்துள்ளன. இப் பிறகுழு கோலேரியக் குழு எனக் கொள்ளப்படுகிறது. எனவே, இவ்விரு மொழிகளும் திராவிட மொழிகளேயாயினும் பிற திராவிட மொழிகளைவிடத் தூய்மை குறைந்தவையே.


  1. An Epitome of the grammar of Oraon by Rev. F. Batsch.
  2. Khurnk.
  3. Rhotas