பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திருந்தா மொழிகள்

53

இக் கணக்கில் நாடோடிகளான இராமூஸிகள், இலம்பாடிகள் முதலியவர்களைச் சேர்க்கவில்லை. ஏனெனில், இலம்பாடிகள் பேசுவது ஒருவகை இந்துஸ்தானியேயாகும். இராமூஸிகள் மொழியோ தெலுங்கின் மரூஉ. ஆதலால், அவை தனியாகக் கூறப்பட வேண்டியவையல்ல. மேற்குத்தொடரின் தென் பகுதியில் வாழும் மலையரசர்களிலோ சற்று வடக்கில் மலையாள மொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளச் சிதைவுமொழி ஒன்றையும், தெற்கே தமிழ் மொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளக் கலப்புற்ற தமிழ்ச் சிதைவுமொழி ஒன்றையுமே பேசுகின்றனர்.

இனி, மத்திய இந்தியாவிலும் வங்கத்திலும் உள்ள ஹோ, முண்டா முதலிய கோலேரிய மொழிகளும், சவரர்களின் மொழிகளும் திராவிட மொழிகளுள் சேர்க்கப்பட வில்லை. இவற்றை சர் ஜார்ஜ் காம்பெல் கோலேரிய இனமென்றும் ஹாட்ஜ்ஸன் தமிழினம் என்றும் வகுத்துள்ளார்கள். கோண்டு, கு, இராஜ்மஹால், ஒராவோன் முதிலிய மொழிகளுடன் இவை உறவுடையவையாகத் தோற்றுகின்றன என்பது உண்மையே. ஆனால் இவ்வுறவு ஒருசில திராவிட முதற்சொற்களுடன் நின்றுவிடுகிறது. இலக்கண அமைப்பில் யாதோர் ஒற்றுமையுமில்லை. இத்தகைய உறவு இன உறவாகமாட்டாது; நெடுநாளைய இட அண்மை யையும் பழக்கத்தையுமே காட்டுவதாகும்.

இந்தியாவின் வடகிழக்கில் போடோவர்[1] திமாலர்[2] முதலியவர் மொழிகளையும், குமாவோன்[3] அஸாம் இவற்றிடையேயுள்ள மலைக்காட்டு மக்களின் மொழிகளையும் இவ்வாறே திராவிட மொழியினத்திற் சேர்க்கவில்லை. ஹாட்ஜ்ஸன் இவற்றையும் தமிழ்க்குழு என்றே மதித்தனர்.


  1. Bodos
  2. Dhimals
  3. Kumaon