பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திருந்தா மொழிகள்

55

பிராகுவீ மொழியில் ஒருசில தலைமையான சொற்கள் திராவிடச் சார்புடையவையாயினும், சொற்களுள் பெரும்பாலான திராவிடத்தின் வேறாயிருக்கின்றன. ஆனால் இலக்கண அமைப்பிலோ தெளிவான திராவிட ஒற்றுமைகள் உள்ளன. பிராருவீ மக்கள் தாங்கள் ஹாலெப்பி[1] (அலெப் போவி) லிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். இஃது ஒருகால் அவர்களிடையே பின்வந்த ஒரு கூட்டத்தாரைக் குறிப்பதாயிருக்க வேண்டும். அஃது ஆரியக் கூட்டமாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனால், எப்படியும் திராவிடச் சார்பான ஒரு முதல் கூட்டம் இருந்திருக்க வேண்டும். அதைப்பற்றி இத்திராவிட ஒற்றுமைகளால் தெரிவது தவிர வேறெதுவும் தெரியவில்லை. பின்வந்த கூட்டத்தார் இவர்களை வென்று இவர்களுடன் கலந்திருக்கலாம்.

பிராகுவீ மொழி திராவிட வகுப்பைச் சிந்து ஆறு கடந்து நடு ஆசியாவரையிற் கொண்டுபோய்ச் சேர்க்கின்றது. அம்மொழி உண்மையில் பஞ்சாபி, சிந்தி இவற்றுடன் ஒத்த மொழியாயினும் திராவிடப் பகுதி ஒன்றுடன் இணைந்துள்ள தென்பது மறுக்கக்கூடாத உண்மையாகும். இத் திராவிடப் பகுதியை நோக்கத் திராவிடரும் பின்னாளைய ஆரியர், கிரேக்கர், சித்தியர், மங்கோலியர் முதலியவர்களைப்போல் வட மேற்கிலிருந்து வந்தவர்தாமோ என்று எண்ண இடமிருக்கின்றது.

 

 

  1. Haleb (Aleppo)