பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

61

களும் அவ்வாறேதான் தோன்றியிருக்க வேண்டும் என்று கொள்ளுதல் சால்பாமோ? ஆகாது. கீழ்வரும் உண்மைகளைச் சரிவா உய்த்துணராமையே தவறான இம் முடிபுக்குக் காரணமாகும்.

(1) திராவிட மொழிகளில் வடமொழிச் சார்பில்லாத தனிப் பகுதி, வடமொழிச் சார்புள்ள பகுதியினும், மிகமிக விரிந்ததொன்று என்பதைப் பண்டையாராய்ச்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.

(2) ஒரு மொழியின் உயிர்நிலைகள் என்று கருதப் படுவனவான இடப்பெயர்கள், வினைத்திரிபுகள், பெயர்த் திரிபுகள், சொல்லாக்க முறை முதலிய எல்லாவற்றிலும் திராவிட மொழிகள் வடமொழியினின்று அடியோடு மாறுபடுகின்றன என்ற கண்கூடான உண்மையையும் அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.

(3) திராவிட மொழிகளும் வடமொழியினின்று தோன்றினவே என்று கொண்ட மேனாட்டாராய்ச்சியாளர் தங் கொள்கைக்குத் திராவிட மொழிகளில் அக்காலை வெளியிடப்பட்டிருந்த அகர வரிசைகளையே[1] ஆதாரமாகக் கொண்டிருந்தனர். அவற்றுள் வடமொழிச் சொற்களிற் பெரும்பாலன மாறுதலின்றி அப்படியே காணப்படுகின்றன ; மாறுதல் பெற்ற சில சொற்கள் தம் வடமொழித் தொடர்பை நன்கு தெரிவிப்பனவாகக் காணப்படுகின்றன. ஆனால், திராவிட மொழிப் புலவர்கள் இச் சொற்களைத் திராவிடச் சொற்களாகக் கொள்ளாமல், (வடமொழியிலிருந்து வந்த) திசைச் சொற்களாகவே கொண்டனர் என்பதும், அவற்றின் திரிபளவிற்கேற்றவாறு அவை அவர்களால் ஒழுங்குபடுத்திப் பதிப்பிக்கப்பட்டன என்பதும் பாவம்! அவ் வாராய்ச்சியாளர்க்குத் தெரியாது. அன்றியும், வடமொழிச் சார்பற்ற சொற்களின்


  1. 1. Dictionaries.