பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

(4) மேலும், வடமொழியி லிருந்து தோன்றியனவே திராவிட மொழிகள் என்று நம்பிய மேனாட்டாராய்ச் சியாளர்களுக்கு, வட சொற்களையே எடுத்தாளாமலோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகவும் அருகிய நிலையில்மட்டும் எடுத்தாண்டோ வரும் திருந்தா மொழிகளும் திராவிட மொழி யினத்தில் இருக்கின்றன என்பதே தெரியாது. அன்றியும், வடசொற்களை ஓரளவிற்கு எடுத்தாளும் திருந்திய திராவிட மொழிகளும் கட்டாயமாக அவற்றை எடுத்தாளத்தான் வேண்டுமென்பதில்லாமல், விருப்பமுளதேற் பயன்படுத்தியும், இன்றேல் அறவே யொதுக்கியும் வருகின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்றைய நிலையை நோக்கின், வடமொழியை அறவே நீக்குவ தென்பது தெலுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம் மொழிகள் கணக்கு வழக்கில்லாமல் வட சொற்களை எடுத்தாண்டுவந்துள்ளமையாலும், அச் சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப் பண்புகளை யிழந்து, தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால், திராவிட மொழிகள் அனைத்தினும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுள்ள தமிழ்மொழியோ, வேண்டுமென்றால், வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்பதோடன்றி, அவற்றின் உதவி யில்லாமல் மிகவும் மேம்பட்டு, வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும்.

பண்டைத் தூய தமிழ்மொழிக்குச் செந்தமிழ் என்று பெயர். இச் செந்தமிழிலேயே தமிழ்மொழியிற் காணப்படும் பண்டை இலக்கியங்களிற் பெரும்பாலன இயன்றுள்ளன. ஆனால், அவற்றுள் காணப்படும் வடசொற்களோ மிகமிகக் குறைவு. இன்றைய பேச்சுத் தமிழுட