பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

67

னும், உரைநடைத் தமிழுடனும் இந்நிலை மாறுபட்டதொன்றாகக் காணப்படும். எதனால் அவ்வாறெனிலோ, கண்ணுங் கருத்துமாய் இருந்து வடசொற்களையும், வடமொழி யெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச்சொற்கள், மரபுமொழிகள், அமைப்புகள் ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலே தான். தமிழ்மக்களிடையே இச் செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்த தென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ் நூலில் எவ்வளவுக் கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக் கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமையினாலேயே இனிது தெளியப்படும். பிற மொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக் கெவ்வளவு வட மொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அந் நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும்; தமிழிலோ எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்கு கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும். உண்ணாட்டுச் சிற்றூர்களிலும், நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்துவரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகின்றது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புநிலை அம் மொழியிலியலும் செய்யுள்களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுகளிலுமிருந்தே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒரு பொது உண்மையாகும். பிற் காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும்,