பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப் பட்டுள்ளன. இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம் மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம். தெலுங்கு மொழியை யெடுத்துக்கொண்டால், அம் மொழியில் இலக்கண நூல்கள் எழுதியவர்களுள்ளும், இலக்கியங்கள் எழுதியவர்களுள்ளும் முதன்மையானவர்களும், பெயர் போனவர்களும் பார்ப்பனர்களே. அம் மொழியிற் காணப்படும் நூல்களுள் ஒன்றே ஒன்றுதான் பார்ப்பன ரல்லாதாரான ஆசிரியரொருவரால் இயற்றப்பட்டதாகும். உண்மையாகப் பார்த்தால், தெலுங்குமக்கள் என்று அழைப்பதற்கு எவ்வகையிலும் உரியாரான தெலுங்குப் பார்ப்பன ரல்லாத தொகுதியினர் தங்கள் மொழிவளர்ச்சி, கலைவளர்ச்சி ஆகிய வற்றைப் பார்ப்பனர்களிடமே ஒப்படைத்துவிட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

தமிழிலோ இப்படி யில்லை. நூல் என்ற பெயருக்குரிய னவாய்ப் போற்றிச் சேமித்துவைக்கவேண்டிய வகையில் பார்ப்பனர்களால் எழுதப்பட்டனவாய்க் காணக்கூடியவை மிகமிகச் சிலவே. தமிழ்மக்களால் அவர்களுடைய தாய் மொழியாகிய தமிழின் வளர்ச்சியும், கலையும், நாகரிகமும் பண்டுதொட்டுக் கண்ணுங் கருத்துமாய் ஆர்வத்துடனும் வெற்றியுடனும் போற்றப்பட்டுவருகின்றன. தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்டதில்லை. தாழ்ந்த வகுப்பினராய திருவள்ளுவாரால் எழுதப்பட்ட திருக்குறளுக்குப் பார்ப்பனாரான பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப்படுகிறது.

தென்பகுதியில் பேசப்படும் மொழிகள் வடமொழியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டபோதிலும், தனிப்