பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

73

பட்ட இலக்கிய வளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவற்றுட் சில விரும்பி முயன்றன என்றும், தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம் ஆகிய மொழிகளிற் காணப்படும் முதன்மை யான இலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்போ, அன்றி விரிவுரையோ ஆதல்வேண்டும் என்றும், அவ் விரிவுரை யெழுதுவதிலும் வடமொழித் தொடர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் உவில்ஸன்[1] என்பவர் கூறுகிறார். தமிழைப்பற்றிய வரையில் இக் கூற்று ஒப்பத்தக்கதன்று. தமிழில் இரண்டு ஒப்பற்ற சிறந்த நூல்களாக உலகத்தோரால் கருதப்படுவன குறளும், சிந்தாமணியுமாம். இவ் விரண்டும் முற்றிலும் வடமொழித் தொடர்பற்றவை. தமிழாசிரியர்கள் வடமொழி நூலமைப் பையும் நடையையும் பின்பற்றியிருக்கக்கூடும்; தொடருக்குத் தொடர் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ் இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் இவ்வாறு எழுந்தனவேயாம். தமிழர் தங்கள் கம்பராமாயணம் முதனூலாகிய வால்மீகி இராமாயணத்தினும் மிகவுஞ் சிறந்தது என்று உரிமை பாராட்டுவதே இதற்குச் சான்றாகும்.

(5) மொழிகளுள் ஒன்றற்கொன்றனிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கப் பெரிதும் பயன்படும் முறைகளுள் மிகவும் முடிவானது அம் மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பதே யாம். அம் முறைப்படி திராவிட மொழிகள் வடமொழி யினும் வேறானவை யென்றும், திராவிட மொழிகளை இந்து-ஐரோப்பிய மொழியினத்தோடு இணைப்பதைவிட, சித்திய மொழியினத்தோடு இணைப்பதே சால்புடைத்தாகும் என்றும் துணிந்து கூறலாம்.


  1. Professor Wilson