உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வினை அடைகளும் ஆகவருகின்றன; பெயரடைகளும் பெய ரெச்சங்களும் பெயரின் ஆறாம் வேற்றுமையும் பெயருக்கு முன்னும், இட உருபுகளும் கால உருபுகளும் பெயருக்கு முன் அன்றிக் தாம் தழுவும் பெயர்களுக்கும் அவற்றின் வேற்றுமை உருபுகளுக்கும் பின்னாகவும் வருகின்றன. வினை யெச்சங்களும் வினை அடைகள் போல வினைக்கு முன்னாகின்றன. எல்லாவற்றையும் தழுவும் வினைமுற்று இறுதியிலேயே நிற்கிறது. இவ்வாறு சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு முறையிலும் சித்திய மொழிகள் திராவிட மொழிகளை ஒத்தே இருக்கின்றன.

மேற்கூறிய இலக்கண அமைதிகளிலெல்லாம் திராவிட மொழிகள் பொதுவாக இந்து - ஐரோப்பிய மொழிகளினின்றும் வேறுபட்டே இருப்பதும், நெடுநாள் கலந்து வாழ்ந்துங்கூட வடமொழியினின்றும் இன்னும் வேறுபட்டேயிருப்பதும் காண்க. அதே சமயத்தில், எங்கெங்கோ நடு ஆசியாவிலும், வட ஆசியாவிலும் சிதறிக் கிடக்கும் சித்திய மொழிகளுடன் அவை பொருந்தி இருப்பது கவனிக்கத் தக்கது.

திராவிட மொழிகள் வேறு, வடமொழி வேறு என்பது மேற்கூறியவற்றால் நன்கு தெரியப்படும். திராவிட மொழிகள் வடமொழியி லிருந்து பெறப்பட்டன அல்ல; அன்றி அதனுடன் சேர்க்கப்படக்கூடிய பண்புடையனவு மல்ல.

சில குறிப்பிட்ட இடங்களில் வடமொழி பிற இந்து-ஐரோப்பிய மொழிகளைவிடச் சித்திய மொழிக் குழுவுடன் உறவுடையதாய்த் தோற்றுவது ஒரு வேளைப் பழங்குடிகளுடன் உள்ள நெடுநாட் பழக்கத்தைப் பொறுத்ததா யிருக்கலாம். இவற்றுள் ஒன்று, வடமொழியில் (ட ண ஷ) என்ற நாஅடி அண்ண மெய்கள் இருப்பனவாகும். இவ் வகை