பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடமொழிக்கும் திராவிட மொழிக்கும் வேறுபாடுகள்

79

யில், ”மொழி யியலில் சீனத்தின் இடம்”[1] என்ற நூலில் எட்கின்ஸ் என்பார் கொண்ட புதிய கொள்கையைக் குறிப்பிடல் வேண்டும். உருபின்றி விகுதியிலேயே பெயர்களின் வேற்றுமை அமைதல், சொல் லொழுங்கு, தழுவு வாக்கியங்கள் தலைவாக்கியத்திற்கு முன்வரல், வினைமுற்று இறுதியில் நிற்றல் ஆகிய இலக்கண அமைப்புக்களுள் வடமொழி ஆரிய இனத்தைவிடத் துரானிய இனத்தையே பின்பற்றி யுள்ளது என அவர் கூறுகிறார். ஆனால் வடமொழியை விட இவ்வகையில் இன்றைய வட இந்திய உண்ணாட்டு மொழிகளே விலக்கின்றி முற்றிலும் இவ்வொழுங்கைப் பின் பற்றுகின்றன. வடமொழி உரைநடையில்கூட ஒன்றிரண்டிடங்களில் இவ் வொழுங்குக்கு மாறுபாடு ஏற்படுகிறதென்பதை எட்கின்ஸே எடுத்துக்காட்டுகிறார். ஆயினும் பொதுப்பட உரைநடையில் இவ் வொழுங்குப்படி வினைமுற்றே ஈற்றிலும், தழுவு வாக்கியங்கள் முன்னும் வருகின்றன. ஆனால் இக் கொள்கை நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க உறுதிப்பாடு உடையதன்று; ஏனெனில் சொல் ஒழுங்கு ஒன்றையேபற்றி வகைப்படுத்துவதாயின் கிரேக்க மொழியைவிட இலத்தீனும், ஆங்கிலத்தைவிட ஜெர்மனும் துரானியச் சார்புடையவை என்று கூறவேண்டி வரும்.


  1. ”China's Place in Philology"—Mr. Edkins