பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கால் பந்தாட்டம்


6. குறி உதை (Goal-Kick)

தாக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள் எதிர்க் குழு இலக்கினுள் பந்தை செலுத்துவதற்காகக் கொண்டு வரும் பந்தானது, குறி தவறி, இலக்கிற்கு அப்பால் உள்ள பகுதிகளில், கடைக் கோட்டைத் தாண்டிக் கடந்து, முழுதும் உருண்டோடிப் போய்விடுமானால், ஆடு களத்திற்கு வெளியே பந்து சென்றுவிட்டது என்பதாகக் கொண்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, பந்து எந்தப் பக்கமாக வெளியில் சென்றதோ, அந்தப் பக்கத்தில் உள்ள இலக்குப் பரப்பைக் குறிக்கும் ஒரு கோட்டின் மேல் வைத்துப் பந்தை ஆடுகளத்தினுள் உதைத்துத் தள்ளி ஆட்டத்தைத் தொடங்கும் முறைதான் 'குறி உதை' என்று பெயர் பெறுகிறது.

இவ்வாறு வாய்ப்புப் பெறும் குறி உதையை, தடுக்கும் குழுவினர் ஒருவர் எடுக்கும் பொழுது எதிர்க்குழுவினர் அனைவரும், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியேதான் நின்று கொண்டிருக்க வேண்டும். உதைக்கின்ற ஆட்டக்காரர், தான் உதைக்கின்ற பந்தானது, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே செல்லுகின்ற அளவிலேயே உதைத்தாட வேண்டும்.

அத்துடன், அந்தப் பரப்பைப் பந்து கடக்கும் முன்னர், உதைத்த அவரே மீண்டும் சென்று ஆடக்கூடாது. வேறு எவரும் பந்தை ஆடும்முன், அவரே இரண்டாவது முறையாக விளையாடவும் கூடாது.

இந்தக் குறியுதையில் ஆடுகளத்தை நோக்கியே பந்தை உதைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், தமது பின்புறம் நிற்கும் இலக்குக் காவலரிடம் பந்தைத் தள்ளிவிட்டு அவரைப் பிடித்து உதைத்தாடச் செய்வது தவறாகும்.