பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

29


குழுவினர் பந்தை இலக்கினுள் அனுப்பாது வெற்றி எண் பெறாமல் போனாலும், மீண்டும் அவர்கள் ஒருமுறை ஒறுநிலை உதை எடுக்கக் கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள்.

அதேபோலவே, தாக்கும் குழுவினர் இந்த நேரத்தில் தவறிழைத்தால், பந்தை இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற்றிருந்தாலுங்கூட, மீண்டும் ஒருமுறை பந்தை உதைத்தாடும் வாய்ப்பு அவருக்கு நடுவரால் வழங்கப்பெறும்.

இவ்வாறின்றி, உதைத்தாட இருக்கும் ஆட்டக்காரரே தவறு செய்தால், அடுத்த குழுவினர் 'மறைமுகத் தனி உதை' எடுக்கும் வாய்ப்பைப் பெறுவர். அவர்களும், தவறு நிகழ்ந்த இடத்திலிருந்து பந்தை வைத்து எதிர்க் குழு பகுதிக்கு உதைத்தாடி மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.

10. வெற்றி எண் (Goal)

நிறுத்தி இருக்கும் இரண்டு நேர்க் கம்பங்களையும் இணைத்துள்ள குறுக்குக்கம்பம் அமைந்துள்ள பரப்பே இலக்காகும். அதற்குக் கீழே குறிக்கப்பட்டிருக்கும் கடைக்கோட்டைக் கடந்து, கம்பங்களுக்குள்ளே பந்து முழுவதும் சென்றால்தான் அதை வெற்றி எண் என்கிறோம்.

விதிகளுக்கு உட்பட்டு, எதிர்க் குழுவினரின் இலக்கிற்குள் பந்தை உதைத்தோ, மார்பால் அல்லது முழங்காலால் தள்ளியோ அல்லது கணுக்கால்களுக்கிடையில் ஏந்தியோ, அல்லது தலையால் மோதியோ பந்தை இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெறலாம்.