பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
31
 

அவர்களே இந்த ஒறுநிலை உதை நிகழ்ச்சியில் பங்கு பெற முடியும்.

இவ்வாறு 5 ஒறுநிலை உதை வாய்ப்பிலும் சேர்த்து வந்தக்குழு இறுதியில் அதிக வெற்றி எண் பெறுகிறதோ, அக்குழுவே வெற்றி பெற்றதாகும். இதில் மீண்டும் சமநிலை வந்தால், மீண்டும் ஒருமுறை 5 ஒறுநிலை உதை வாய்ப்பு இருகுழுக்களுக்கும் வழங்கப் பெறும்.

இவ்வாறு ஆட்ட இறுதியில் வெற்றி தோல்வியை நடுவர் நிர்ணயிப்பார்.

11. அயலிடம் (Off-Side)

ஆட்டக்காரர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, குழப்பம் ஏற்படுவதே இந்த அயலிட விதியில்தான். தங்களைக் குழப்பிக் கொள்வதுடன் அருகில் உள்ளவர்களையும் குழப்பி, இன்னும் சில சமயங்களில் ஆட்ட அதிகாரிகளுடனேயே சண்டையை ஏற்படுத்துகின்ற அளவுக்கு, சிக்கலை உண்டு பண்ணுகின்ற தன்மையை அன்றாடப் போட்டிகளில் நாம் காண்கிறோம். ஆகவே, இந்த அயலிட விதியைப் பற்றித் தீர அறிந்து கொள்வதும் திறமையை வளர்த்துக் கொள்வதும் மிகமிக அவசியமாகும்.

அயலிடம் என்றால் என்ன? விளையாடுகின்ற ஒரு ஆட்டக்காரர், எதிர்க் குழுவினருக்குரிய ஆடுகளப் பகுதியில், அவர்கள் இலக்கிற்கு அருகாமையில் நின்று கொண்டு, தன் குழுவுக்கு சாதகமான நிலையிலே ஆட முயல்வதையே அயலிடம் என்கிறோம்.

ஆகவே, ஒருவரை அவர் அயலிடத்தில் நிற்கிறார் என்று சொல்வதற்கு முன், அவர் நிற்கின்ற இடம் எங்கே?