பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கால் பந்தாட்டம்


அறிவுரை

எல்லாவற்றிற்கும் மேலாக, உடலை நல்லமுறையில் வைத்திருப்பதே சிறந்த ஆட்டம் விருத்தியடையக்கூடிய வழியாகும். இதில்தான் ஆடுவோருக்கு ஆனந்தமும் பார்வையாளர்களுக்குத் திருப்தியும் ஏற்படும்.

எப்பொழுதும் கால்பந்தாட்டத்தின் நினைவிலேயே ஊறியிருக்க வேண்டும். 90 நிமிடங்கள் ஆடுகின்ற இந்த ஆட்டத்திற்கு நடுவரின் இறுதி விசில் ஒலி கேட்கின்ற வரையில் உறுதியாகவும், தெம்புடனும், தீராத சக்தியுடனும் ஆட உதவும் உடல் வலிமையை, வலிய இதயத்தைக் காத்து வைத்திருக்க வேண்டும்.

ஏதோ போட்டிக்கு முன் ஒருசில நாட்கள் ஆடினால் போதும் என்றிருக்கின்ற பொல்லாத மனப்பான்மையைப் பொசுக்கி எறிய வேண்டும். வாய்ப்புக்கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதைவிட, தினந்தினம் முறையோடு பயிற்சிகளை முயற்சியுடன் செய்து வரவேண்டும்.

இளவயதில் இருந்தே, ஆர்வமும் பாசமும் கொண்டு நண்பர்களுடனும், மற்ற ஆட்டக்காரர்களுடனும் ஆடிப்பழக வேண்டும். ஒவ்வொரு திறன் நுணுக்கத்தையும் தனித்தனியே பயிலுதல் சிறந்தது. குழு ஒற்றுமை, பாங்கரிடம் பரிந்து பேசும் உறவு மனப்பான்மை, திட்டமிடுதல், தீர்மானித்தல், உறுதியாக உள்ளுக்கத்தோடு செயல்படுதல் எல்லாம் தேவைப் படும் இந்த ஆட்டத்தில், ஆட்டத்திற்கென்று தன் உணர்வுகளை, ஆசைகளை அர்ப்பணித்துக் கொண்டோர்க்குப் பேரும் புகழும் பின் தொடர்ந்து வரும். பேரின்பம் சேரும்.