பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

75


பந்தைக் குறுக்கும் நெடுக்குமாக வழங்கிக் கொண்டு, எதிர்க்குழு கடைக்காப்பாளர்களையும் இலக்குக் காவலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, இலக்கினுள் பந்தை அடிப்பது மற்றொரு முறை.

இலக்கை நோக்கி முற்றுகையிட்டு ஆடும்போது எதிர்க்குழு இலக்கினருகில் சென்றுதான் (சில சமயங்களில்) பந்தை உதைக்க வேண்டும் என்பதில்லை. சிறிது தூரத்தில் இருந்தே, ஆட்டத் தொடக்கத்தில் பந்தை இலக்குக் காவலனை நோக்கி அடிக்க வேண்டும்.

அப்படி அடிப்பதானது அந்த பந்தைப் பிடிக்கும் முறையை வைத்து, எதிர்க்குழு இலக்குக் காவலன் எப்படிப்பட்டத் திறமையுள்ளவன் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வழிவகுத்து விடுகிறது.

சில இலக்குக் காவலர்கள் நடுங்கிக் கொண்டே பந்தைப் பிடிப்பார்கள். சிலர் வெட்கப்பட்டவாறு பிடிப்பார்கள்.

சிலர் உருண்டு வரும் பந்தை மிகவும் சிரமப்பட்டுப் பிடிப்பார்கள். இன்னும் சிலருக்கோ, உயரமாக வரும் பந்தைக் கண்டால், உதறல் எடுத்துவிடும். சிலர் பந்தைப் பிடிக்கும்போதே பிடியைத் தளர்த்திவிடுவார்கள். மேலும் சிலர், கால்களாலேயே தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள். தடுமாறுவார்கள்.

ஆகவே, காவலர் எப்படிப்பட்டவர் என்பதை ஆட்ட ஆரம்பத்திலேயே கண்டுகொண்டால், பிறகு, எப்படித் தாக்குதல்களைத் தொடரலாம் என்பதையும் தாராளமாகத் திட்டமிடலாம் அல்லவா?